மனித உடலில் சிறுநீரகங்கள் முக்கியமான பணியை மேற்கொள்கின்றன. ரத்தத்தில் உள்ள நச்சுகளை வடிகட்டும் பணியை செய்கின்றன. சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் உடல் ஆரோக்கியம் மோசமடையும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தொற்று, நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படலாம். சிறுநீரகப் பாதிப்பை தொடக்க நிலையில் கண்டறிவது சற்று கடினம்தான். பாதிப்பு அதிகமானால் மட்டுமே அறிகுறிகள் வெளியே தெரியும். அந்த அறிகுறிகள் என்னென்ன?
சோர்வு மற்றும் பலவீனம்
சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது, ரத்த ஓட்டத்தில் நச்சுகள் சேர்ந்து சோர்வு ஏற்படும். தவிர, மோசமான சிறுநீரக செயல்பாடு ரத்த சோகையையும் ஏற்படுத்தும், இந்தச் சூழலில் உடலில் ஆக்ஸிஜன் சுழற்சி குறைவதால், உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்காமல் போகும். இதனால் உடல் தொடர்ந்து சோர்வாகவும் பலவீனமாகவும் இருக்கும்.
இதையும் படிங்க: உலக kidney தினம்: கிட்னி சரி இல்லேன்னா சட்னி ஆகிடுவீங்க... மக்களே இதை மட்டும் செய்யுங்கள்..!

சிறுநீர் தோற்றத்தில் மாற்றம்
சிறுநீரின் நிறம் அல்லது தன்மை மாறுவது சிறுநீரக பிரச்னைகளின் ஓர் அறிகுறிதான். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, நுரையுடன் சிறுநீர், சிறு நீர் நிறம் மாறி வருவது இருந்தால், கொஞ்சம் உஷாராக இருக்கும்.
மூச்சுத் திணறல்
சிறுநீரக செயலிழப்பு மூலம் நுரையீரலில் திரவம் சேரக் கூடும். இதனால் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். கூடுதலாக, ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறைவதால் ரத்த சோகை ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தும். இதனால் உடலில் ஆற்றல் குறைந்து அதீத சோர்வு ஏற்படும்.
அரிப்பு, வறண்ட தோல்
சிறுநீரகங்களின் செயல்பாடு மோசமடையும்போது ரத்தத்தில் இருந்து நச்சுகளை முழுமையாக அகற்ற இயலாத நிலை ஏற்படும். இதனால் உடலில் நச்சுகள் அதிகரிக்கும். அப்போது தோலில் அரிப்பு, வறட்சி, எரிச்சல் உணர்வு ஏற்படுத்தும். சிறுநீரக நோய் தாது சமநிலையின்மையையும் பாதிக்கலாம்.
வாய் துர்நாற்றம்
மோசமான சிறுநீரக செயல்பாடு காரணமாக நச்சுகள் ரத்த ஓட்டத்தில் சேரும்போது, அது யுரேமியா என்ற நிலைக்கு வழிவகுக்கும். இதனால் வாயில் உலோகச் சுவை, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

கால், கைகளில் வீக்கம்
உடலில் இருந்து கூடுதல் திரவத்தை அகற்ற சிறுநீரகங்களே உதவுகின்றன. அவற்றின் செயல்பாடு பாதிக்கும்போது, திசுக்களில் திரவம் குவிந்து, வீக்கம் (எடிமா) ஏற்படும். குறிப்பாக பாதங்கள், கணுக்கால், கால்கள், கண்களைச் சுற்றிய பகுதியில் வீக்கம் ஏற்படும். இந்த வீக்கம் தொடர்ந்து காணப்பட்டால் சிறுநீரக செயல்பாடு குறைவதைக் குறிக்கும்.
குமட்டல் மற்றும் வாந்தி
சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டதன் காரணமாக உடலில் நச்சுகள் சேர்ந்து குமட்டல், வாந்தியை ஏற்படுத்தும். இதனால் பசியின்மை, எதிர்பாராத எடை இழப்பு ஆகியவை ஏற்படலாம்.
கவனம் செலுத்துவதில் சிரமம்
உடலில் நச்சுக்கள் சேர்வதால் மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கலாம். இது கவனம் செலுத்துவதில் பிரச்சனைகள், நினைவாற்றல் இழப்பு, குழப்பத்தை ஏற்படுத்தும். மோசமான சிறுநீரக செயல்பாடு உள்ள நபர்களுக்கு மூளை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
இதையும் படிங்க: மனிதர்களுக்கு அவசியமான ஆவி பிடித்தல் சிகிச்சை... யாரெல்லாம் ஆவி பிடிக்கலாம், கூடாது..?