தஞ்சை மாவட்டம் திருவோணம் போலீஸ் சரகத்திற்குட்பட்டவர் 10 வயதுடைய சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களாக சிறுமி பள்ளியில் சோர்வாக இருந்துள்ளார். இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் சிறுமியின் தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளனர், இதைத் தொடர்ந்து தனது மகளை அவரது தந்தை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார், அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை இது குறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பந்தப்பட்ட சிறுமிக்கு திண்பண்டம் வாங்கி கொடுத்து, 35 வயதான ராஜேஷ் என்பவர் பாலியல் ரீதியாக அத்துமீறியது தெரிந்தது. இதை தெரிந்து கொண்ட அவரது நண்பரான 40 வயதான முகிலரசன் என்பவரும், ராஜேஷை கண்டிக்காமல், அவரும் பாலியல் தொல்லை அளித்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் ராஜேஷ் மற்றும் முகிலரசன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலியல் நோக்கமின்றி சிறுமியின் உதட்டை பிதுக்குதல் ‘போக்ஸோ’ குற்றமாகாது... டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!

இதேபோல் திருவாரூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலி தொழிலாளியையும் போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த 48 வயதான முருகேசன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் தொல்லை அளித்துள்ளார், இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி இரவு சிறுமி சிறுநீர் கழிக்க சென்ற பொழுது சிறுமி சிரமம்படுவதை பார்த்த அவரது தாய், இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது சிறுமி அழுது கொண்டே முருகேசன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி உள்ளார். அதை வெளியே சொன்னால் அடித்து விடுவதாகவும் மிரட்டி உள்ளதாகவும் சிறுமி கூறியுள்ளார்.

இதையடுத்து உடனடியாக சிறுமியை அவரது பெற்றோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சிறுமியின் தாயார் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முருகேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் கொடுத்துள்ளார் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி முருகேசனை நாகப்பட்டினம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: போக்சோ வழக்குகளில் விடுதலை பெற்றவர்களுக்கு எதிரான மேல்முறையீடு... டிஜிபி-க்கு பறந்த கடிதம்..!