அதிமுகவில் எம்ஜிஆர் காலத்திலிருந்து அரசியலில் இருப்பவர் செங்கோட்டையன். கொங்கு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க ஆளுமையாகவும் உள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவுடன் அதிக நெருக்கம் காட்டி வந்தார். தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை இணைப்பதில் இவர் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிச்சாமி பாராமுகமாக உள்ளார்.

இதற்கிடையில் செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி மதிப்பதில்லை எனவும், நிர்வாகிகள் நியமனத்தில் செங்கோட்டையனின் பரிந்துரைகள் ஏற்கப்படுவதில்லை எனவும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மத்தியில் புகைச்சல் உள்ளது. இதனால் பழனிசாமி- செங்கோட்டையன் இடையே பனிப்போர் நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி கோவையில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக விவசாய அமைப்புகள் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தின. அதற்கான அழைப்பிதழ், பேனர்களில் அதிமுக மூத்த தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை எனக்கூறி அவ்விழாவில் பங்கேற்பதை செங்கோட்டையன் தவிர்த்தார்.

அப்போது முதல் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியுடன் பாராமுகமாக இருந்து வருகிறார். அவருடனான சந்திப்பை தவிர்த்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் திடீரென்று டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். உடனே, தமிழகத்தில் 2026 தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித் ஷா, எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இதற்கிடையே கடந்த 28-ம் தேதி செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று, அமித் ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க: அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்தால் தலைவர் பதவி ராஜினாமா.? ஒரு முடிவில் இருக்கும் அண்ணாமலை.!!

இது அதிமுக வட்டாரத்திலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அந்தச் சூடு அடங்குவதற்குள் செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வேளை எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணிக்கு முட்டுக்கட்டை போட்டால், செங்கோட்டையன் மூலம் காய் நகர்த்தல்களை மேற்கொள்ள பாஜக முயற்சிக்கிறது என்றெல்லாம் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கிடையே ஒய் பிரிவு பாதுகாப்பு தொடர்பான தகவலும் வெளியாகியிருப்பது அதிமுகவிலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
இதையும் படிங்க: அமித் ஷாவிடம் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை… அதிமுக- பாஜக கூட்டணியில் ட்விஸ்ட்..!