கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " சென்னை - ராமேஸ்வரம் இடையே தற்போது இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மூன்றாவது ரயில் திருவாரூர், திருத்துரைப்பூண்டி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை இணைக்கிறது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இது. அது நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவையிலிருந்து ராமநாதபுரம், ராமேஸ்வரத்துக்கு ரயில் சேவை வழங்க வேண்டும். விரைவில் மத்திய அமைச்சர் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.

கோவை - கரூர் இடையே சாலை விரிவாக்கப் பணியை மத்திய அரசு நிராகரிக்கவில்லை. அதிக நிதி தேவைப்படும் திட்டம் இது. எனவே விரைவில் நல்ல செய்தி வரும் என நம்புகிறோம். ‘சி ஓட்டர் சர்வே’ முடிவுகளின்படி தமிழக முதல்வருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்துள்ளது. நான்கு பேரில் மூன்று பேர் நிராகரிப்பதாக கூறுகின்றனர். நாங்கள் மேற்கொண்ட கள ஆய்வு முடிவுகளும் அதைத்தான் கூறுகிறது. ஒரு கட்சி தமிழகத்தில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் ஐந்து மண்டலங்களில் மூன்று மண்டங்களில் வெற்றி பெற வேண்டும். இன்று தென்மாவட்டங்களில் விவசாயம், தொழில் நலிவடைந்து விட்டது.

கூட்டணி குறித்து எந்தல் கருத்தையும் நான் கூற விரும்பவில்லை. எனக்கு எந்த ஒரு கட்சி மீதும், தலைவர் மீதும் கோபம் கிடையாது. நான் யாருக்கும் எதிரானவனும் கிடையாது. எனவே பொறுத்திருந்து பாருங்கள். நான் டெல்லியில் பேசும் போது தொண்டனாக பணியாற்றவும் தயார் என்று கூறினேன். அண்ணாமலை அரசியலுக்கு வந்திருப்பது அதிகாரத்திற்கு அல்ல. தமிழகத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25இல் நான் கட்சியில் இணைந்ததில் இருந்து தற்போது வரை அதே உணர்வோடுதான் உள்ளேன்.
பாரத பிரதமர் ஏப்ரல் 6-ம் தேதி இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்து தமிழகம் திரும்புகிறார். பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்கிறார். கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய பின், அரசு நடத்தும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட பின் திரும்பிச் செல்கிறார்.
இதையும் படிங்க: அமித் ஷாவிடம் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை… அதிமுக- பாஜக கூட்டணியில் ட்விஸ்ட்..!

மக்களவை தேர்தலுக்கு பின் தமிழகத்திற்கு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். அதற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறோம். என்னால் யாருக்கும் பிரச்சினை வராது. மாற்றி, மாற்றி பேசுபவன் நான் அல்ல. எனக்கு தமிழகம் முதன்மையானது. பாஜக வளர்ச்சி முக்கியம். எனது தனிப்பட்ட வளர்ச்சியோ, மற்றவர் வளர்ச்சியோ முக்கியம் கிடையாது." என்று அண்ணாமலை தெரிவித்தார்.

அதிமுகவோடு கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்துவிடுவேன் என்று முன்பு அண்ணாமலை கூறியிருந்தார். டெல்லியில் உள் துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசிய பிறகு பாஜக - அதிமுக கூட்டணி உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் அதிமுக கூட்டணி அமைந்தால் ராஜினாமாவா என்று அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குதான் "மாற்றி, மாற்றி பேசுபவன் நான் அல்ல. எனக்கு தமிழகம் முதன்மையானது. பாஜக வளர்ச்சி முக்கியம். எனது தனிப்பட்ட வளர்ச்சியோ, மற்றவர் வளர்ச்சியோ முக்கியம் கிடையாது." என்று அண்ணாமலை கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செஞ்சா தான் பாஜகவோட கூட்டணி-னு சொல்ல முடியுமா..? இபிஎஸ்க்கு சவால் விட்ட அமைச்சர்..!