அதிமுக நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் இன்று காலை உடல் நலக்குறைவு ஏற்பட்டு நெல்லையில் காலமானார். அதிமுகவில் இருந்து 1977, 1980 தேர்தல்களில் சட்டப்பேரவைக்கு தேர்வான இவர், கடந்த 2000ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்படவே, திமுகவில் இணைந்தார்.

கருப்பசாமி பாண்டியன் திமுகவில் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்தன. ஆனால் முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்ததால் இந்த இணைப்பு தள்ளிவைக்கப்பட்டது. கலைஞர் மறைந்த பிறகு கருப்பசாமி பாண்டியனை திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் திமுகவில் இணைத்து கொண்டார். அவருக்கு சில பொறுப்புகள் வழங்கபடாமல் இருந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின் நாங்குநேரி இடைத்தேர்தலில் சில பொறுப்புகள் தரப்பட்டன. அந்த பணிகளையும் சிறப்பாக திறம்பட செய்திருந்தார் கருப்பசாமி பாண்டியன்.
இதையும் படிங்க: கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி காலமானார்..!

2006 ஆம் ஆண்டு தேர்தலில் தென்காசி தொகுதியில் இருந்து திமுக எம்.எல்.ஏ.வாக தேர்வான இவர், 2015ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே தனக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என ஆதங்கத்தில் இருந்த கருப்பசாமி பாண்டியன் பலமுறை கோரிக்கை வைத்தும் கவனிக்கப்படாமல் இருந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதால் என்னை பயன்படுத்திக் கொண்டதாக விரக்தியில் இருந்துள்ளார்.

அதன் பிறகு, 2016ல் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிய அவருக்கு, சசிகலா பொதுச் செயலாளராக இருந்தபோது அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், 2017ல் கட்சியில் இருந்து விலகி 2020ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன்.

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கருப்பசாமி பாண்டியன் நெல்லையில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 80 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த கார்.. பெட்ரோல், ஆயில் கலந்து விஷமான தண்ணீர்.. 2 பேர் பலி..!