2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் மும்மரமாகி வருகின்றன. திமுக கூட்டணியை தொடர்ந்து கிட்டத்தட்ட தேர்தலுக்கு தயாராகி விட்டது. ஆனால், அதிமுகவின் நிலைமை பரிதாபமாக உள்ளது.பாஜகவுடன் கூட்டணியா? தாவெகவுடன் கூட்டணியா எனத் தவித்து வந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், டெல்லியில் அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி இடையிலான சந்திப்பு அமைந்துள்ளது. ஆனாலும், பேச்சுவார்த்தைக்காக போகவில்லை என அடித்துக்கூறினார் எடப்பாடி பழனிசாமி.

அமித்ஷாவை இரும்பு மனிதர் என ஒரு பக்கம் புகழ்ந்து பேசி ஆர்.பி. உதயகுமார் வீடியோ வெளியிட, கூட்டணி பற்றி அமித்ஷாவிடம் பேசவே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி நேற்று மறுத்து இருந்தார். தற்போது ஒருவர் பின் ஒருவராக கூட்டணி உறுதிப்படுவதற்கான வார்த்தைகளை அதிமுகவில் உள்ள சினியர்கள் மெல்ல அவிழ்த்து விட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.. ஒரே நேர்க்கோட்டில் எடப்பாடி பழனிச்சாமி - அண்ணாமலை..!!
இன்று காலை அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்கக்கூடிய ஆர்.பி.உதயகுமார் ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டு இருக்கிறார். அதில் அமித்ஷாவை புகழ்ந்து இருந்தார்.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத்துக்கு வரும்போது திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக- பாஜக கூட்டணியில் இருப்பதாகவும், பாமக சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்து சென்றார். இன்று சட்டப்பேரவைக்கு திண்டுக்கல் சீனிவாசன், பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, அருள், சதாசிவம் உள்ளிட்ட 5 சட்டமன்ற உறுப்பினர்களும் வரும்போது, பாமகவின் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்திடம் ''நாங்கள் உங்களோடு கூட்டணியில் இருக்கிறோம். அதிமுக, பாஜக, பாமக நாம் மூன்று பேரும் கூட்டணியில்தான் இருக்கிறோம்'' என்று மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்திடம் சிரித்துக் கொண்டே பேசி சென்றார் திண்டுக்கல் சீனிவாசன்.

செய்தியாளர்கள் அவரிடம், ''கூட்டணி உறுதியாகி விட்டதா? என்ற கேள்விக்கு, பதிலளித்த திண்டுக்கல் சீனிவாசன், ''நாங்கள் எப்போதுமே கூட்டணியில்தான் இருக்கிறோம்'' என்ற பதிலையும் அவர் தெரிவித்து விட்டு உள்ளே சென்றார். இன்று காலை ஆர்.பி.உததயகுமார் காணொலி காட்சி வெளியிடும் போது அமித்ஷாவை புகழ்ந்தார். அதனை தொடர்ந்து, திண்டுக்கல் சீனிவாசன் கூட்டணியில் இருப்பதாக உறுதி செய்கிறார். அதிமுகவினுடைய மூத்த நிர்வாகிகள் பாஜக கூட்டணி குறித்தும், தலைவர்கள் குறித்து பாராட்டியும், கூட்டணியில் இணைந்தது போன்ற கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லிக்கு அண்ணாமலை பயணம்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக அதிரடி மூவ்!!