பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பதும், பைஜாமை கீழே கழற்றுவதும் பாலியல் பலாத்காரத்தில் சேராது என்று தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு மனிதநேயற்ற, சட்டத்தின் கூறுகள் குறித்து தெரியாத உணர்வற்ற செயல் என்று உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 17ம்தேதி போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த ஒருவர் தன்மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் தனிநீதிபதி ராம் மனோகர் நாராயன் மிஸ்ரா கடந்த 17ம் தேதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.காவே, நீதிபதி ஜார்ஜ் மாஷ் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை தாமாக முன்வந்து எடுத்து (26ம்தேதி)இன்று விசாரணைக்கு எடுத்தனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.காவே கூறுகையில் “ அலகாபாத் உயர்நீதிமன்ற தனி நீதிபதி ராம் மனோகர் நாராயண் தெரிவித்த கருத்துகள் முற்றிலும் உணர்ச்சியற்றவை, மனிதாபிமானமற்றவை மற்றும் சட்டத்தின் கோட்பாடுகளே தெரியாமல் தெரிவித்தவை.
இதையும் படிங்க: சர்ச்சையான ‘மார்பகத்தை பிடிப்பது பலாத்காரமில்லை’ தீர்ப்பு.. அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்..!
குற்றம் சாட்டப்பட்ட இருவராலும் பாதிக்கப்பட்ட சிறுமி அனுபவித்த அதிர்ச்சியை விவரிக்கும் சில கூறுகள், குற்றம்சாட்டப்பட்டவர்களின் செயல்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய நோக்கில் இல்லை என்று கூறியிருப்பது என்பது நீதிபதி முற்றிலுமாக உணர்திறன் இல்லாமல் இருந்தார் என்பதை காட்டுகிறது.
இந்த வழக்கில் தீர்ப்பு உடனுக்குடன் அளிக்கப்படவில்லை என்பது வழக்கின் மோசமான பகுதி. கடந்த 2024 நவம்பரில் இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது, அதன்பின் மார்ச் 17ம் தேதிதான் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட 4 மாதங்களுக்குப்பின், நீதிபதியின் கூற்றுப்படி, வழக்கின் உண்மைகளை நன்கு ஆய்வு செய்து பரிசீலித்து வழங்கப்பட்டதா.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பாதிக்கப்பட்ட சிறுமியின் மார்பகங்களைப் பிடித்து, அவரது பைஜாமாவின் கயிற்றைப் பிரித்து, ஒரு பாலத்தின் கீழ் இழுத்துச் செல்ல முயன்றதைக் குறிப்பிடும் 3 பத்திகள் மிகவும் அருவருப்பானதாக உச்ச நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச அரசு ஆகிய இரண்டுக்கும் சம்மன் அனுப்பி பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம். மேலும், உச்ச நீதிமன்ற பதிவாளர் இந்தத் தீர்ப்பை உடனடியாக அலகாபாத் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பி, தலைமை நீதிபதிக்கு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடுகிறோம். அலகாபாதா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்திவைக்கிறோம்.” இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
வழக்கின் முன்னூட்டம்!
2021ம் ஆண்டில் சாலையில் நின்றிருந்த ஒரு சிறுமிக்கு பவான், ஆகாஷ் ஆகியோர் காரில் லிப்ட் அளித்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு, பாலத்துக்கு அடியில் இழுத்துச் சென்றனர். இந்த சிறுமியின் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவரவே இருவரும் தப்பிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி, சிறுமியின் உறவினர் அளித்த புகாரில் போலீஸார் பவான், ஆகாஷ் இருவரையும் கைது போலீஸார் செய்தனர். அவர்கள் மீது ஐபிசி பிரிவு 376 பாலியல் பலாத்காரம், போக்ஸோ சட்டத்தில் பிரிவு18ன் கீழ் சிறுமியை பலாத்கார முயற்சி செய்தது ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் மனு செய்து தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யவும், பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும் கோரினர். இந்த மனுவை நீதிபதி ராம் மனோகர் நாராயன் மிஸ்ரா விசாரித்து கடந்த 17ம் தேதி உத்தரவுகளைப் பிறப்பித்தார் அதில் “குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாலியல் பலாத்காரத்துக்கான முயற்சிதான். அதாவது பலாத்காரம் செய்வதற்கான தயாரிப்பு நிலைக்குதான் குற்றச்சாட்டப்பட்டவர்கள் சென்றனர். ஒரு குற்றத்தைச் செய்வதற்கான தயாரிப்புக்கும், உண்மையான முயற்சிக்கும் உள்ள வேறுபாடு அதிக அளவிலான உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட ஆகாஷ் அந்த சிறுமியை பாலத்துக்கு கீழே கொண்டு சென்று அவரின் பைஜாமை கிழித்து உள்ளாடையே இறக்கியுள்ளார். இதை எந்த சாட்சியும் பார்க்கவில்லை, இந்த செயல்பாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமி நிர்வாணமாக்கப்படவில்லை, ஆடைகள் கழற்றப்படவில்லை. ஆதலால், பாதிக்கப்பட்டவருக்கு எதிராக பாலியல் பலாத்காரம் என்ற குற்றச்சாட்டு பொருந்தாது, குற்றம்சாட்டப்பட்டவரும் பாலியல் பலாத்கார முயற்சியும் செய்யவில்லை.
சிறுமியின் மார்பகங்களை பிடிப்பது, பைஜாமாவைக் கிழிப்பது, பாலத்துக்கு அடியில் இழுத்துச் செல்வதெல்லாம் பாலியல் பலாத்கார முயற்சி வழக்கில் சேர்க்க முடியாது. ஆதலால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குப்பிரிவை ரத்து செய்து அதற்கு பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரை ஐபிசி பிரிவு 354 (பி) மற்றும் போக்ஸோ சட்டத்தின் பிரிவு 9 மற்றும் 10 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கலாம் எனத் தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: டெல்லி நீதிபதி அளித்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்யுங்கள்.. அலாகாபாத் வழக்கறிஞர்கள் போராட்டம்..!