பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் தமிழக பாஜகா தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி சென்றுள்ளார். இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்ட பாஜகவின் பல்வேறு மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணாமலையின் இன்றைய டெல்லி பயணம் கடந்த வாரம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்றாக இருந்தாலும், நேற்றைய தினம் தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவின் மூத்த தலைவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருப்பதும், அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் கூட்டணிக்கு இணக்கமான சாதகமான ஒரு சூழல் ஏற்பட்டிருப்பதாக பரவலாக பேச்சி எழுந்திருக்கிறது. இந்நிலையில் அண்ணாமலையின் இன்றைய டெல்லி பயணம் மற்றும் அவரது பல்வேறு சந்திப்புகள் தமிழக அரசியலில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இன்றைய சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர்அண்ணாமலைக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாஜக மற்றும் அதிமுக இடையே மீண்டும் கூட்டணிக்கு இணக்கமான சாதகமான ஒரு சூழல் ஏற்பட்டிருந்தாலும் அது இன்னும் முழு செயல்வடிவும் பெறவில்லை. அது குறித்து முறையாக இன்னும் அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் அதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையில் இந்த உறவை அடுத்த கட்டமாக முன்னெடுத்து செல்வது, இரு கட்சிகளுக்கும் இடையே ஒரு சுமுகமாக உறவை பேணுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அண்ணாமலைக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ட்விட்டரில் கருத்து மோதல்.. யோகிக்கு மு.க.ஸ்டாலின் பதில்.. விமர்சித்த அண்ணாமலை..!

குறிப்பாக அதிமுக தலைவர்களையோ, அதிமுகா தலைமையையோ குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த உறவை பாதிக்கக்கூடிய வகையில் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என்றும், மக்கள் பிரச்சனைகளில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளோடு இணைந்து குரல் எழுப்புவது போராட்டங்களை முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டலாம் எனத் தெரிகிறது.

ஏனென்றால் அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முறிந்ததற்கு அண்ணாமலையின் செயல்பாடுகளே முக்கிய காரணம் என அதிமுக தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில் மீண்டும் கூட்டணிக்கு சாதகமான இணக்கமான ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அந்த உறவையும், இணக்கமான சூழலையும் சீர்குழைக்கும் வகையில் பாதகமான எந்தவிதமான கருத்துக்களையோ செயல்பாடுகளையோ மேற்கொள்ள வேண்டாம் என அண்ணாமலைக்கு அமித் ஷா ஸ்ட்ரிட்டாக அட்வைஸ் கொடுக்க வாய்ப்புள்ளது என அரசியல் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.

இவை தவிர தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கக்கூடிய சூழ்நிலையில் பல்வேறு மக்கள் நல பிரச்சனைகளை மக்கள் மத்தியில் இன்னும் தீவிரமாக முன்னெடுத்து செல்வது, ஆளும் கட்சிக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட சில அறிவுரைகளும் வழங்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. குறிப்பாக டாஸ்மாக் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கை, தமிழகத்தை நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், போதைப் பழக்கம் அதிகரிப்பு போன்ற விவகாரங்களை மக்கள் மத்தியில் தீவிரப்படுத்த வலியுறுத்துவார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: NDA கூட்டணி அமைந்துவிட்டது...டிடிவி, ஓபிஎஸ் நிலை என்ன? அண்ணாமலை நீடிப்பாரா? தொகுதிகள் எவ்வளவு?