திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 33). ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராக பணி புரிந்து வந்தார். இவர் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான ஜெயக்குமார், கடந்த சில நாட்களாக லட்சக்கணக்கில் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார். இதனால் மனம் உடைந்த ஜெயக்குமார் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே நெய்க்காரபட்டி பகுதியில் சேலம் - மயிலாடுதுறை சென்ற ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

தண்டவாளம் பகுதியில் உடல் துண்டாகி கிடந்த நிலையில் கரூர் மாவட்ட ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனி ஒரு உயிர்கூட பலியாகக் கூடாது என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து வங்கி மேலாளர் தற்கொலை: மொத்த உயிரிழப்புகள் 88-ஆக உயர்வு
இதையும் படிங்க: ஆன்லைன் விளையாட்டு மட்டுமே தற்கொலைக்கு காரணமல்ல... ஆன்லைன் நிறுவனம் விளக்கம்..!

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தேவர்மலை கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற வங்கி மேலாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்திற்கும் கூடுதலாக பணத்தை இழந்ததால், ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் தொடர்வண்டி முன் பாய்ந்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார். ஜெயக்குமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயக்குமாரின் தற்கொலை கடந்த 3 மாதங்களில் நிகழ்ந்த 11-ஆம் தற்கொலை ஆகும். திமுக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 28 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக இதுவரை 88 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை இழந்துள்ளனர். இது மிகவும் கவலையளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனி ஒரு உயிர்கூட பலியாகக் கூடாது. அதை உறுதி செய்யும் வ்கையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்காக நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. இதுபோன்ற தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினைத் தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிடவும் அரசும் சினேகா போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் காத்திருக்கின்றன. உதவிக்கு அழையுங்கள்: அரசு உதவி மையம் எண் - 104 சினேகா தன்னார்வத் தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060
இதையும் படிங்க: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேர கட்டுப்பாடு.. இளைஞர்களின் நலன்களுக்காகவே..!