இறுமாப்பில் இ.பி.எஸ்..! அதிமுகவில் பாஜகவின் அடுத்த ஆப்ஷன்... செங்கோட்டையனுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு..!
இரண்டு விஷயங்களிலும் எடப்பாடி பழனிசாமி விடாப்பிடி காட்டி வருவதால், பாஜக செங்கோட்டையனை ஒரு ஆப்ஷனாக கருதுகிறதோ என சந்தேகங்களை கிளப்பி உள்ளது.
நேற்று மதுரை சென்று அங்கிருந்து டெல்லிக்கு ரகசிய பயணம் மேற்கொண்ட அதிமுக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், நிர்மலா சீதாராமனையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டசபை கூட்டம் நடந்து வரும் நிலையில், அதை புறக்கணித்துவிட்டு நேற்று காலை 9.56 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் இருந்து செங்கோட்டையன் டெல்லி பயணம் மேற்கொண்டார். இன்று காலை 8.40 மணிக்கு டெல்லியில் இருந்து மீண்டும் மதுரைக்கு வந்து உள்ளார். இந்நிலையில், செங்கோட்டையனுக்கு மத்திய படைப்பிரிவின் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாஜகவின் பாசம்..! கோடீஸ்வர நண்பர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி வங்கிக்கடன் தள்ளுபடி.. ராகுல் காந்தி விளாசல்..!
எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்று கடந்த மார்ச் 24ஆம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அப்போது கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், தம்பிதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆனால், கூட்டணி குறித்து பேசவில்லை என மறுத்து இருந்தார் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில், செங்கோட்டையன் நேற்று அமித் ஷாவையும், நிர்மலா சீதாரமனையும் சந்தித்து பேசியது அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோரும் டெல்லியில் முகாமிட்டு இருந்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் கருத்து வேறுபாட்டில் செங்கோட்டையன் உள்ளதாக கூறப்படும் நிலையில், பாஜக தலைவர்களை செங்கோட்டையன் சந்தித்துவிட்டு வந்து உள்ளது அரசியல் கேள்விகளை எழுப்பி உள்ளது.
ஊரெல்லாம் அதிமுக -பாஜக கூட்டணி உறுதியாகி விட்டது என்று கூறிவந்தாலும் அதை வெளிப்படையாக கூறாமல் நழுவிச் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் விதித்த அனைத்து நிபந்தனைகளை அமித் ஷா ஏற்றுக் கொண்டாலும் ஒரே நிபந்தனையால் கூட்டணி ஊசலாட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பாஜக -அதிமுக கூட்டணி அமைய எடப்பாடி பழனிச்சாமி, அமித் ஷாவிடம் பல நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்றும் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி ஒதுக்கீடு, எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு என்பது குறித்து அதிமுக தான் முடிவு எடுக்கும். இந்த விவகாரங்களில் பாஜக தலையிட கூடாது. கூட்டணி அமையும் பட்சத்தில் டிடிவி.தினகரன், ஓ.பி.எஸ், சசிகலா ஆகியோரை கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ள முடியாது என நிபந்தனை விதித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் மறைமுக பனிபோர் இப்போதும் நிலவி வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அண்ணாமலையை பொருத்தவரை அவர் அதிமுக கூட்டணியை ஆரம்பத்தில் இருந்தே விரும்பவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கோ, அண்ணாமலை பாஜக தமிழக தலைவராக இருப்பது பிடிக்கவில்லை. இருவருக்கும் நிலவி வரும் பனிப்போர் தொடர்ந்து வருகிறது. இதனால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணியை அண்ணாமலை விரும்பவில்லை. அதேபோல் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருக்கும் வரை கூட்டணி அமைக்க வேண்டாம் என நினைக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இருப்பினும் பாஜக எடுக்கக்கூடிய முடிவுக்கு அண்ணாமலை கட்டுப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
அனைத்தையும் கேட்டுக் கொண்ட அமித் ஷா, நீங்கள் டி.டி.வி.தினகரன், சசிகலா, ஓ.பி.எஸை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அதிமுகவே தலைமை தாங்கிக் கொள்ளட்டும். நீங்களே முதல்வர் வேட்பாளராக இருந்து கொள்ளுங்கள். ஆனால், அண்ணாமலைதான் தமிழக பாஜக தலைவராகத் தொடர்வார். ஆனால், உங்கள் கூட்டணி விவகாரங்களில் அவர் தலையிட மாட்டார். அவருக்கு பதிலாக உங்களுடன் தேர்தலில் பணியாற்ற தமிழக பாஜகவை சார்ந்த ஒரு உயர் அதிகாரக்குழுவை நியமிக்கிறோம் என அமித் ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் கூறியுள்ளார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ அமித் ஷாவிடம், எங்களது முக்கிய நிபந்தனைகளில் ஒன்று அண்ணாமலையை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான். அவருக்கு அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் விருப்பமில்லை. அவர் இந்தக் கூட்டணி அமையக்கூடாது ன்பதற்காகவே அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்களை அருகில் வைத்துக் கொண்டு அதிமுகவை மறைமுகமாக விமர்சித்து வருகிறார். அவரை வைத்தெல்லாம் முடியாதுங்க'' என வெளிப்படையாகவே கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு பிடி கொடுக்காமல் அனுப்பி வைத்துள்ளார் அமித் ஷா.
ஆகையால்தான், கூட்டணி குறித்து பேசியும், எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவிடம் தமிழக நலன்களுக்காக கோரிக்கை மட்டுமே வைப்பதற்காக சந்தித்தோம் எனக் கூறி வருகிறார். அண்ணாமலை பதவி நீக்கம் என்கிற ஒற்றைப் புள்ளியில் கூட்டணி முடியாமல் வந்து நிற்கிறது'' என்று கூறி வருகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அண்ணாமலையை நீக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பதாலும் அதற்கு பாஜக தலைமை தெளிவான பதிலை கூறாமல் நழுவுவதாலும் வெளிப்படையாக எடப்பாடி பழனிச்சாமியால் பாஜக கூட்டணியை முழுமனதாக அறிவிக்க முடியவில்லை'' என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்து இருந்தார் அமித்ஷா. நேற்று செய்தியாளர்கள் அண்ணாமலையிடம், ''எடப்பாடி பழனிச்சாமி, அமித் ஷாவை சென்று சந்தித்து வந்த பிறகு முன்னாடி இருந்த உங்களது அதிமுகவுடனான மோதல் போக்கு எப்படி இருக்கும்? என கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ''மோதல் போக்கு இல்லை. நான் எதற்கு செருப்பு இல்லாம் ரோட்டில் உங்களிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும்? என் கட்சியை வளர்க்க வேண்டும் என்று நான் இருக்கிறேன். என் தொண்டன் செத்துப் போய் கிடக்கிறான். 50 வருடமாக 60 வருடமாக பாஜக வளரும் என்று வளருமா? வளராதா? என்று என் தொண்டன் நின்று கொண்டிருக்கிறான்.
அதற்கு பொறுப்பு ஏற்பது நான்தான். என்னுடைய செயல்பாடுகள் எல்லாமே எனது கட்சி வலிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இருக்கிறேன். அதே நேரத்தில் 2026 தேர்தலைப் பற்றி நான் ஒரு வார்த்தையை பயன்படுத்தினேன். தமிழக மக்களுடைய நலன், சில நேரத்தில் கட்சியை விட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. என்னை பொறுத்தவரை எந்த பொறுப்பிலும் வேலை செய்வதற்கு நான் தயார். தொண்டனாக வேலை செய்வதற்கும் தயார். என்னால் யாருக்கும் எப்போதும் பிரச்சினை வராது. கட்சி தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அண்ணாமலை ஏற்றுக் கொள்வாரா? ஏற்றுக் கொள்ள மாட்டாரா? என்கிற பிரச்சினையே இல்லை.
என்னுடைய வேலை என்னவோ அதை நான் தொண்டனாகக்கூட செய்வேன். தலைவர் என்கிற பதவி இருந்தால் தான் வேலை செய்வேன் என்கிற அவசியம் கிடையாது. ஆகையால் எந்த கருத்துக்களாக இருந்தாலும், நாங்கள் எங்களுடைய தலைவரிடம் சொல்லி இருக்கிறோம். தமிழக மக்களின் நலன் முக்கியமானது, முதன்மையானது. அதற்காக அண்ணாமலையை பொருத்தவரை எதை வேண்டுமானாலும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்'' எனத் தெரிவித்து இருந்தார். ஆக, அண்ணாமலை பதவி விலகும் முடிவில் இல்லை என்பதை காட்டுகிறது. இந்நிலையில்தான் செங்கோட்டியன் நேற்று ரகசியமாகச் சென்று அமிதஷா, நிர்மலா சீதாரமனை சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அமித் ஷாவின் நோக்கம் பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். கூட்டணிக்காக அண்ணாமலையை பதவியை விட்டு நீக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால், இந்த இரண்டு விஷயங்களிலும் எடப்பாடி பழனிசாமி விடாப்பிடி காட்டி வருவதால், பாஜக செங்கோட்டையனை ஒரு ஆப்ஷனாக கருதுகிறதோ என சந்தேகங்களை கிளப்பி உள்ளது.
இதையும் படிங்க: திமுகவோட அரசியல் நாடகத்தை இனி நம்ப மாட்டாங்க.. லெப்ட் ரைட் வாங்கிய அண்ணாமலை..!