30 பேர் பலியானது பெரிய விஷயமல்ல: மகா கும்பமேளா கூட்டநெரிசல் குறித்து நடிகை ஹேமா மாலினி அசட்டை
30 பேர் பலியானதெல்லாம் ஒரு விஷயமா: மகா கும்பமேளா கூட்டநெரிசல் குறித்து நடிகை ஹேமா மாலினி அசட்டை
மகா கும்பமேளாவில் கூட்டநெரிசலில் 30 பேர் பலியானது பெரிய விஷயல்ல. அதை ஊதி பெரிதாக்கப்படுகிறது, உண்மையில் மகா கும்பமேளா சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது என்று பாஜக எம்.பியும் நடிகையுமான ஹேமா மாலினி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 29ம் தேதி பிரயாக்ராஜ் நகரில் நடந்துவரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட பக்தர்கள் கூட்டம் திடீரென அதிகரித்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டு 30க்கும் மேற்பட்டோர் பலியானார்கள், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது குறித்து பாஜக எம்.பியும் நடிகையுமான ஹேமா மாலினியிடம் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்கள் கேட்டனர் அதற்கு அவர் பதில் அளிக்கையில் “ நாங்களும் கும்பமேளாவுக்கு சென்றிருந்தோம், கூட்டநெரிசல் ஏற்பட்ட அன்றுதான் புனித நீராடினோம்.
அனைத்தும் சிறப்பாக இருந்தது, நல்ல வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆமாம், பிரயாக்ராஜில் கூட்டநெரிசல் சம்பவம் நடந்ததுதான் 30 பேர் உயிரிழந்தார்கள்தான். அது ஒன்றும் பெரிதான சம்பவம் இல்லையே. அது ஒன்றும் பெரிய சம்பவமாக எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொருத்தவரை அந்த சம்பவம் பெரிதாக்கப்படுகிறது.
பிரயாக்ராஜ் நகரில் அனைத்தும் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது, அனைத்தும் சிறப்பாக நடந்து வருகிறது.மக்கள் வருகிறார்கள், புனித நீராடுகிறார்கள், செல்கிறார்கள். இது கடினமான பணிதான், இருந்தும் உ.பி. அரசு சிறப்பாகக் கையாள்கிறார்கள்” எனத் தெரிவித்தார்
கூட்டநெரிசலில் உயிரழந்தவர்கள் உண்மையான எண்ணிக்கை மறைக்கப்படுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறார்கள் என நிருபர்கள் கேட்டபோது, அதற்கு ஹேமாமாலினி பதில் அளிக்கையில் “ அவர்களுக்கு என்ன விருப்பமோ எதைவேண்டுமானாலும் சொல்லட்டும். தவறான தகவல்களைச் சொல்வதுதானே அவர்களின் பணி” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #Breaking: மகா கும்பமேளாவில் மளமளவென பற்றி எரியும் தீ… தீயணைப்புப் படையினர் மும்மரம்..!
கும்பமேளாவில் கூட்டநெரிசலில் 30 பேர் பலியான சம்பவம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2வது நாளாக இன்றும் விவாதிக்கப்பட்டது. சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில் “ கும்பமேளாவில் நடந்த கூட்டநெரிசலில் எத்தனை பக்தர்கள் உயிரிழந்தார்கள் என்ற உண்மையான தகவல் இதுவரை இல்லை. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை அரசு மறைக்கிறது. இந்த தவறான மேலாண்மை செய்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் பேசுகையில் “ சுதந்திர இந்தியாவில் நடந்த மோசமான சோக நிகழ்வுகளில் கும்பமேளாவில் நடந்த கூட்டநெரிசலில் சிக்கிய மக்கள் உயிரிழப்பும் ஒன்றாகும்” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், கும்பமேளாவில் நடந்த கூட்டநெரிசல் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, பட்டியல் தர வேண்டும் எனக் கோரி வருகிறார்கள்.
ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு, இந்த கூட்டநெரிசல் சம்பவத்துக்கு பின் சதித்திட்டம் இருக்கிறது, விசாரணை முடிந்தபின், இதற்கு காரணமானவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது
இதையும் படிங்க: மஹா கும்பமேளாவில் திரண்ட கோடிக்கணக்கான பக்தர்கள்… கூட்ட நெரிசலில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் பலி..?!