×
 

சட்டமன்றத்தில் வெறும் வாக்கிங்.. இந்த ஆளுநர் தேவையா.? உதயநிதி ஸ்டாலின் பொளேர்!

ஆளுநர் ரவி செய்யும் ஒரே வேலை சட்டப்பேரவையில் வாக்கிங் செல்வது மட்டும்தான். இப்படிப்பட்ட ஆளுநர் நம‌க்கு தேவையா? என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது இங்கு வந்து நேரில் வாக்கு சேகரித்தேன். தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி. நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியிலாவது  வெற்றி பெற செய்யுங்கள் என்று பிரதமர் மோடி தமிழகம் வந்து கேட்டார். ஆனால்,  40 தொகுதிகளிலும் பாஜகவுக்கு தோல்வியை கொடுத்து மோடியை அனுப்பி உள்ளீர்கள்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மக்களால் தேர்தெடுக்கப்பட்டவரா? ஆளுநர் ரவி செய்யும் ஒரே வேலை சட்டப்பேரவையில்  வாக்கிங் செல்வது மட்டும்தான். இப்படிப்பட்ட ஆளுநர் நம‌க்கு தேவையா?  சட்டப்பேரவையில் ஆளுநரை தொலைக்காட்சியில் காட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி உறவினர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை நடத்தியுள்ளது.

இன்னும் 11 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து சேவை, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகையை திமுக அரசு வழங்கி வருகிறது. இத்திட்டம் மூலம் 8 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: விசிக - திமுக கூட்டணி வலுவாக உள்ளது.. சொல்லி அடிக்கும் திருமா

தற்போது மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் எடுத்துகாட்டாக உள்ளது. இதுதான் திராவிட மாடல் அரசு. ஈரோடு இடைத்தேர்தலில் திமுக  போட்டியிடுவதைத் தொடர்ந்து  அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ளது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி 10 முறை தோல்வி அடைந்துவிட்டார்.  தொடர்ந்து 11ஆவது முறை தேர்தலில் தோல்வியடைய இருப்பதால் தேர்தலில் போட்டியிட போவதில்லை என பழனிச்சாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியை 200 தொகுதிகளில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

 

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பாஜக புறக்கணிக்கிறது... அதிமுக வழியில் அண்ணாமலை அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share