×
 

டாஸ்மாக்கில் தகராறு.. காவலர் கல்லால் தாக்கி கொலை.. கஞ்சா வியாபாரிகளுக்கு வலை..!

உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் மதுபான கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, காவலர் ஒருவரை கஞ்சா வியாபாரிகள் கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 40). கடந்த 2009 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த இவர் தற்போது, உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் முத்துக்குமார் நேற்று அதாவது மார்ச் 27ம் தேதி தனது பணி முடிந்தவுடன் உசிலம்பட்டி அருகே உள்ள முத்தையன் பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், அங்கே ஏற்கனவே கஞ்சா வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்த பொன்வண்டு  என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.  அங்கு சென்று மது அருந்திய காவலர் முத்துக்குமார், கஞ்சா வியாபாரி பொன்வண்டுக்கு அறிவுரை கூறி உள்ளார்.

இதை நண்பர்கள் முன் தனக்கு ஏற்பட்ட அவமானமாக பொன்வண்டு கருதியதாக கூறப்படுகிறாது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, டாஸ்மாக்கில் இருந்து வெளியேறி வந்த முத்துக்குமார், கள்ளப்பட்டியைச் சேர்ந்த ராஜாராம் என்பவருடன் அருகில் இருந்த தோட்டத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தொட்டு அளவெடுத்த டெய்லர்.. சங்கடத்தில் நெளிந்த மாணவி.. தட்டிக்கேட்காத ஆசிரியர், டெய்லர் போக்சோவில் கைது..!

ஆனால், அந்த தகராறில் ஆத்திரமடைந்த பொன்வண்டு, நண்பர்கள் சிலருடன் முத்துக்குமாரை பின் தொடர்ந்து வந்துள்ளார். தோட்டத்திற்கு அருகில் வந்ததும், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முத்துக்குமாரை கல்லால் தாக்கி படுகொலை செய்துள்ளனர். மேலும், காவலர் முத்துக்குமாருடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த ராஜாராமும் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்தார். தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடையில் நிகழ்ந்த காவலரின் படுகொலை செய்யப்பட்ட தகவலறிந்து விரைந்து வந்த மதுரை மாவட்ட எஸ்.பி. அரவிந்த், உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முத்துக்குமார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய கஞ்சா வழக்கில் வெளி வந்த பொன்வண்டு மற்றும் அவருடன் வந்த நண்பர்களை தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை பெருங்குடி அருகே விருதுநகரைச் சேர்ந்த மலையரசன் என்ற காவலரைத் தாக்கி, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தற்போது மற்றொரு காவலர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது மதுரை மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: போலீஸ்காரர் எரித்து கொலை.. காவலர்களை தாக்கி தப்ப முயன்ற குற்றவாளி.. சுட்டுப்பிடித்த போலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share