சீமான் வீட்டை முற்றுகையிட முயற்சி; தபெகவினரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
கடலூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாலியல் இச்சையை தாய், மகளிடம் தீர்த்துக்கொள்ளச் சொன்னவர் தந்தை பெரியார் என பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. சீமானின் இந்த பேச்சுக்கு திராவிடர் கழகம், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக பெண்ணுரிமை சம்பந்தமான சீமானின் இந்தப் பேச்சைக் கண்டித்த, தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன். இன்று காலை 10 மணிக்கு சீமானின் வீட்டுக்குச் செல்கிறேன். பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை அவர் காட்ட வேண்டும் என அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க: திராவிட மாடல் ஆட்சி ..வார்த்தைக்கு பின்னால் இருக்கும் சரித்திரம் ..மேடையில் புட்டுப்புட்டு வைத்த திமுக எம்.பி கனிமொழி
கு.ராமகிருஷ்ணனின் இந்த அறிவிப்பை அடுத்து, இன்று காலை முதலே சீமான் வீட்டிற்கு முன்னால் ஏராளமான நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். பெரியார் குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு அடுத்து மோதல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சீமானின் வீட்டைச் சுற்றி 3 இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் சீமானின் வீட்டைச் சுற்றியிலும் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
இதனிடையே,சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சென்றனர். அப்போது சீமானின் இல்லத்திற்கு வெகு தூரத்திலேயே தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களை திரும்பிச் செல்லும் படி அறிவுறுத்தினர். ஆனால் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் திரும்பிச் செல்ல மறுத்ததோடு, காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார், அவர்களை குண்டுக்கட்டாக போலீஸ் வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மதுரையில் பாஜக மகளிர் அணியினரை செம்மறி ஆடுகளுடன் ஒன்றாய் அடைத்து வைத்த காவல்துறை… போலீஸாருடன் வாக்குவாதம்