2025 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதனால் போக்குவரத்து மாற்றங்களை சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மாற்றுப்பாதைகள் அமலில் இருக்கும். பொதுமக்கள் MRTS, உள்ளூர் ரெயில் அல்லது மெட்ரோ ரெயில் அரசு எஸ்டேட் மெட்ரோ நிலையம் மூலமாக சேப்பாக்கம் நிலையம் வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கார் பாஸ் வைத்திருப்பவர்கள் தங்கள் வாகனங்களை தங்கள் பாஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ள நியமிக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்த அனுமதிக்கப்படுவார்கள். இந்த வாகன நிறுத்தும் இடத்திலிருந்து கிரிக்கெட் மைதானம் 200 மீட்டர் தொலைவில் உள்ளது. கார் பாஸ் இல்லாதவர்கள், பார்வையாளர்கள் ஆர்.கே.சாலைக்கு கதீட்ரல் சாலை வழியாக காமராஜர் சாலையை (மெரினா கடற்கரை சாலை) அடைந்து, மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை பார்க்கிங்கில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, பின்னர் சுரங்கப்பாதைகள் வழியாக மைதானத்தை அடைய நடந்து செல்ல வேண்டும். இங்கிருந்து கிரிக்கெட் மைதானம் 500 மீட்டர் தொலைவில் உள்ளது.
இதையும் படிங்க: IPL-ன் போது மது, புகையிலை விளம்பரங்களுக்கு தடை.. பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு..!

கிரிக்கெட் போட்டியைக் காண டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற வணிக வாகனங்களைப் பயன்படுத்தி வரும் நபர்களுக்கு அண்ணா சாலையைப் பயன்படுத்தி வாலாஜா சாலையை அடைந்து மைதானம் அருகே இறக்கிவிட்டு, பின்னர் சிவானந்தா சாலைக்குச் சென்று பார்க்கிங் செய்யலாம். வாலாஜா சாலையில் மினி பேருந்து / மாநகர போக்குவரத்துக் கழகம் / சிறப்பு பேருந்துகள் அனுமதிக்கப்படாது. சுவாமி சிவானந்தா சாலையில் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படுவார்கள்.

பொதுமக்கள் பிரஸ் கிளப் சாலை வழியாக மைதானத்திற்கு நடந்து செல்லலாம். பாரதி சாலை வழியாக மட்டுமே விக்டோரியா விடுதி சாலைக்குச் செல்ல முடியும். வாலாஜா சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலையை அடைய முடியாது. பெல்ஸ் சாலை ஒரு வழிப் பாதையாக மாறிவிடும். திருவல்லிக்கேணி ரத்னா கஃபேவிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் பெல்ஸ் சாலை - வாலாஜா சாலை வழியாக திருப்பிவிடப்படும். ரயிலில் செல்லும் பொதுமக்கள் சேப்பாக்கம் ரயில் நிலையம் அல்லது அரசு எஸ்டேட் மெட்ரோ நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2025 ஐபிஎல்: மும்பையை திணறடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி..!