2035 ஆம் ஆண்டுக்குள் தனது ராணுவத்தை மிகவும் சக்திவாய்ந்ததாக மாற்ற சீனா இலக்கு வைத்துள்ளது. இந்த இலக்கைக் கருத்தில் கொண்டு, 2025 ஆம் ஆண்டில் அதன் பாதுகாப்புச் செலவு 7.2 சதவீதம் அதிகரிக்கப்படும் என்று சீனா இன்று அறிவித்துள்ளது. சீனா தனது ஆயுதப் படைகளை விரைவாக நவீனமயமாக்கி வருவதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவுடனான முக்கியமான போட்டியை சீனா மேலும் தீவிரப்படுத்தி வருவதாக நிபுணர்கள் நம்புகின்றனர். போர்க்கப்பல்களை உருவாக்குவதில் சீனா ஏற்கனவே அமெரிக்காவை முந்திவிட்டது.
இப்போது சீனா தனது ராணுவம், விமானப்படையையும் மிகவும் சக்திவாய்ந்ததாக மாற்ற முயற்சிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக சீனா தனது ஆயுதப் படைகளுக்கு அதிக அளவில் செலவு செய்து வருகிறது. இந்த முறையும் அதன் பாதுகாப்பு பட்ஜெட் அதிகமாக உள்ளது.

அமெரிக்காவிற்குப் பிறகு, உலகின் இரண்டாவது பெரிய இராணுவ பட்ஜெட்டாக சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் உள்ளது. இருப்பினும், அதன் பாதுகாப்பு பட்ஜெட் இன்னும் அமெரிக்காவை விட மிகக் குறைவுதான். ஆனால் வீரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, சீனாவைவிட அமெரிக்காவில் குறைவுதான். கடந்த சில ஆண்டுகளில், சீனா தனது ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை தீவிரமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 1.78 டிரில்லியன் யுவான். அதாவது சுமார் 249 பில்லியன் டாலர்கள். இது அமெரிக்காவின் பாதுகாப்பு பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவு. 2025 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பாதுகாப்பு பட்ஜெட் 850 பில்லியன் டாலர்களாகும்.
இதையும் படிங்க: நாங்க எதுக்கும் ரெடி..! அமெரிக்கா போரை விரும்பினால் வரலாம்... அதிபர் ட்ரம்புக்கு ஷாக் கொடுத்த சீனா..!
கடந்த ஆண்டு சீனாவின் இராணுவச் செலவு அதன் மொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.6 சதவீதமாக இருந்தது. இது அமெரிக்கா, ரஷ்யாவின் செலவை விட மிகக் குறைவு. ஆனால், பல நிபுணர்கள் சீனா தனது பாதுகாப்பு பட்ஜெட்டைப் பற்றி அதிகரித்துக் காட்டி பொய் சொல்வதாக கூறுகிறார்கள். இந்த பாதுகாப்பு பட்ஜெட் உலகிற்கு காட்ட மட்டுமே. இது தவிர, சீனா தனது பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் செலவிடுகிறது. அதை சீனா தனது பட்ஜெட்டில் வித்தியாசமாகக் காட்டுகிறது.

சீனா தனது ராணுவத்தை நவீனமயமாக்கும் விதத்தை அமெரிக்காவும், ஜப்பான், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற அதன் அண்டை நாடுகளும் சந்தேகத்துடன் பார்க்கின்றன.கிழக்கு சீனக் கடலில் ஜப்பானுடன் சீனாவுக்கு கடுமையான தகராறு உள்ளது. அதேசமயம் தென் சீனக் கடலில், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, புருனே மற்றும் மலேசியா போன்ற நாடுகளின் உரிமைகளை அது முற்றிலுமாக நிராகரிக்கிறது.
தென் சீனக் கடலில் சீனா தொடர்ந்து தனது இராணுவ பலத்தை நிரூபித்து வருகிறது. தென் சீனக் கடல் மீது தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக சீனா கூறுகிறது. தனது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்த, அவர்கள் பல செயற்கை தீவுகளை கட்டியுள்ளனர். அவற்றை சீனா போரின் போது இராணுவ தளங்களாகப் பயன்படுத்தலாம். தென் சீனக் கடல் தொடர்பான சர்வதேச நடுவர் தீர்ப்பை சீனா நிராகரித்தது.

சீனாவின் மிகப்பெரிய பாதுகாப்பு பட்ஜெட், இராணுவ நவீனமயமாக்கல் திட்டம் அண்டை நாடுகளிடையே கவலையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக தைவான் சீன ஆக்கிரமிப்புக்கு மிகப்பெரிய பயத்தைக் கொண்டுள்ளது. சீனா தைவானை தனது ஒரு பகுதியாகக் கருதுகிறது. அதே நேரத்தில் தைவான் தன்னை ஒரு தனி நாடாகக் கூறுகிறது. தைவானை சீனாவுடன் இணைப்பதற்கு பலத்தைப் பயன்படுத்துவோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.
சீன நாடாளுமன்றத்தின் தொடக்கக் கூட்டத்தொடருக்காக ஆயிரக்கணக்கான சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் பெய்ஜிங்கில் கூடியிருக்கும் நேரத்தில், சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் பேசிய சீனப் பிரதமர், "தைவான் சுதந்திரத்தையும் வெளிப்புற தலையீட்டையும் நோக்கமாகக் கொண்ட பிரிவினைவாத நடவடிக்கைகளை சீனா உறுதியாக எதிர்க்கும். இதனால் நீரிணை உறவுகளின் அமைதியான வளர்ச்சியை ஊக்குவிக்கும்" என்று உறுதியளித்தார்.

சீனா தனது பாதுகாப்பு பட்ஜெட்டை 'தற்காப்பு' செலவினமாக விமர்சனம் செய்வதை நிராகரிக்கிறது. இராணுவச் செலவினங்களின் நோக்கம் அதன் இறையாண்மையைப் பேணுவதாகும் என்கிறது. சீனாவின் வெளிப்புற சூழல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு முன்னுரிமைகள் குறித்த வளர்ந்து வரும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், இராணுவ செலவினங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் சின்-ஹாவோ ஹுவாங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பட்ஜெட்டின் அதிகரிப்பு, மக்கள் விடுதலை இராணுவத்தின் வேகத்தை பராமரிக்கும் இராணுவத் திறன்களைப் பராமரித்து மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், எந்தவொரு நிகழ்வுக்கும் தன்னைத் தயார் நிலையில் வைத்திருக்க சீனாவின் முயற்சியையும் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: பிரசவ வலி எப்படி இருக்கும் தெரியுமா? காதலனுக்கு செயற்கை பிரசவ வலியை வழங்கிய காதலி.. உடல்நிலை மோசமாகி சிகிச்சை பெறும் காதலன்..