வீட்டை விட்டு வெளியே வந்த எச்.ராஜா... சுற்றி வளைத்த போலீஸ் பட்டாளம்... காரைக்குடி எஸ்.பி.யுடன் வாக்குவாதம்!
எச்.ராஜாவை திருப்பரங்குன்றம் செல்லக்கூடாது என தடுத்து நிறுத்திய அவர்கள், வீட்டுக்காவலில் வைக்க முயன்றனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தர்காவை ஆய்வு செய்ய எம்.பி. நவாஸ் கனி தலைமையில் சென்ற இஸ்லாமிய குழுவினர், அங்கு பிரியாணி சாப்பிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து, இன்று திருப்பரங்குன்றம் கோயில் முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக இந்து முன்னணி அமைப்பினர் அறிவித்திருந்தனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இரு மதங்களுக்கு இடையே அசாதாரண சூழலை தவிர்க்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேற்றும், இன்றும்144 தடை உத்தரவை பிறப்பித்தார்.
இதுமட்டுமின்றி மதுரை மாவட்டம் முழுவதும் 3500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் செல்வதற்கு உள்ள 16 வழிகளிலும் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் போலீசார், பஸ், வேன், கார் என அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பிறகே அனுமதித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த இந்து அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை கைது செய்தும், வீட்டுக் காவலில் வைத்தும் திருப்பரங்குன்றம் வருவதை தடுத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், காரைக்குடி அருகேயுள்ள அழகாபுரி தோட்டம் இல்லத்தில் இருந்து பாஜகவினர் சிலருடன் திருப்பரங்குன்றம் செல்வதற்காக காரில் புறப்பட்டார். அப்போது அங்கு காரைக்குடி டிஎஸ்பி, காரைக்குடி தெற்கு காவல் ஆய்வாளர், சாக்கோட்டை காவல் ஆய்வாளர் உட்பட 30க்கும் மேற்பட்ட போலீசார்
குவிந்தனர். எச்.ராஜாவை திருப்பரங்குன்றம் செல்லக்கூடாது என தடுத்து நிறுத்திய அவர்கள், வீட்டுக்காவலில் வைக்க முயன்றனர்.
இதையும் படிங்க: “கொஞ்சம் பொறுத்தா உங்க குடியா கெட்டுடும்” - டங்ஸ்டன் போராட்டக்குழுவால் டென்ஷன் ஆன எச்.ராஜா!
இதனால் ஆத்திரமடைந்த எச்.ராஜா காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், என்னை எனது வீட்டில் வைத்து தடுத்து நிறுத்துவது ஏன்? என கேள்வி எழுப்பினார். என் மீது மதுரை மாவட்ட கமிஷ்னர், மதுரை ஆட்சியர் கூட கை வைக்க முடியாது. ஆனால் நீங்கள் என் வீட்டு வாசலில் வந்து கைது செய்ய பார்க்கிறீர்கள். 3 பேருக்கு மேல் சென்றால் தான் தவறு. என்னை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்கிறீர்கள் என கோபமாக பேசிய அவர், தமிழ்நாட்டை என்ன ஸ்டாலின் குடும்பத்திற்கு நேந்துவிட்டிருக்கிறதா?... நீங்கள் எல்லாம் அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு செயல்படுகிறீர்களா? என சகட்டு மேனிக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: இந்து அமைப்பினர் விரட்டி, விரட்டி கைது... வீடு, வீடாக புகுந்து அலோக்காக தூக்கும் காவல்துறை!