கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை மாநிலங்களின் கடலோர மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சுமார் 6,559 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பேரணி மேற்கொண்டு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், கன்னியாகுமரியில் தங்கள் பேரணியை நிறைவு செய்தனர்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் "வளமான இந்தியா - பாதுகாப்பான இந்தியா"- என்ற முழக்கத்துடன் கடலோர பாதுகாப்பு, கடல் வழியாகப் போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல், ஆயுத கடத்தல் போன்றவற்றைத் தடுப்பது மற்றும் பெண் கல்வி குறித்து கடலோர மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்த சைக்கிள் பேரணி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் நிறைவடைந்தது .

14 பெண்கள் உட்பட 125 பேர் கொண்ட இந்த குழுவினரின் சைக்கிள் பேரணி மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா, பாண்டிச்சேரி, தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி வந்தடைந்தது. இதே போன்று மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் மற்றொரு குழுவினர் மேற்கு கடற்கரை மாநிலங்கள் வழியாக விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: ஸ்பெஷல் அங்கீகாரம்..! கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு..!
மேலும், கொல்கத்தாவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு பேரணியினர் சென்னை வந்தடைந்த போது, அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், ஐபிஎல் போட்டி நடைபெறும் காரணத்தால் சென்னையில் உள்ள கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, கலந்து கொண்டு பேரணி சென்ற நபர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, விவேகானந்தா கேந்திரத்தில் கடற்கரை பாதுகாப்பு குறித்து மீனவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. பின்னர், சைக்கிள் பேரணி மேற்கொண்ட வீரர் - வீராங்கனைகளைப் பாராட்டி பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழாவை முன்னிட்டு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மற்றும் திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் மக்கள் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: இந்தியா வர விருப்பம்.. மனம் திறந்த சுனிதா.. இந்தியாவின் அழகுகளை வர்ணித்த பேரழகி..!