மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் ஒரே நாளில் கொள்ளையர்கள் 14 கடைகளை உடைத்து திருட முயன்றனர். ஆனால், எட்டு கடைகளில் இருந்து மட்டும் அவர்களுக்கு கிடைத்த பணம் ரூ.27 ஆயிரம் தான்.
மற்ற கடைகளில் கல்லாப்பெட்டியில் பணமே இல்லை. நடந்தது என்ன? அந்த சுவாரசிய தகவலை பார்க்கலாம்.
தானே சாராய் பகுதியில் இன்று காலை கடைகளை திறக்கச் சென்ற வியாபாரிகளுக்கு அதிர்ச்சி. அந்தப் பகுதியில் இருந்த 14 கடைகளின் ஷட்டர்களை உடைத்து திருட்டுப் போயிருந்தது.
இதையும் படிங்க: நள்ளிரவில் டார்ச் உடன் புதையல் தேடும் மக்கள்.. மராத்தியர்களின் தங்க புதையல்..?

ஒரு பல் மருத்துவமனை, ஆயுர்வேத மருந்து கடை, பெயிண்ட் கடை, சலூன் உள்பட அந்தக் கடைகளின் உள்ளே சென்று பார்த்த போது கொள்ளையர்களுக்கு அதிர்ச்சி. பல கடைகளில் கல்லாப்பெட்டியே இல்லை. அப்படியே சில கடைகளில் இருந்தாலும் மிக குறைவான அளவு பணமே அதில் இருந்தது. எட்டு கடைகளில் இருந்து அவர்களுக்கு கிடைத்த வருமானம் வெறும் 27 ஆயிரம் ரூபாய் மட்டுமே.
தற்போதெல்லாம் சிறிய பங்கு கடையில் இருந்து பெரிய கடைகள் வரை அனைத்துமே டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் வியாபாரம் நடைபெற்று வருவது தான் இதற்கு காரணம்.
தச்சு வேலை செய்யும் கடை உரிமையாளரான வினோத் பிரஜாபதி என்பவர் சமீப காலமாக யூபிஐ மூலம் மட்டுமே பணம் பெற்று வந்ததால் பெரிய அளவிலான நிதி இழப்பிலிருந்து தப்பினார். "அன்றைய தினம் நான் சரியாக சம்பாதிக்கவில்லையே என்று வருத்தப்பட்டேன். அப்படியே சில வியாபாரங்கள் நடந்தாலும் அவை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தப்பட்டதால் கடை டிராயரில் பணமே இல்லை.

காலை 7 மணிக்கு எனது கடைக்கு எதிரே உள்ள கட்டிடத்தில் வசிக்கும் நண்பர் எனக்கு போன் செய்தார். கடையின் ஷட்டர் உடைந்து கிடப்பதாக அவர் கூறினார். அதைத் தொடர்ந்து கடைக்கு விரைந்து வந்து பார்த்தால் கொள்ளை நடந்திருப்பதை தெரிந்து கொண்டேன். நாங்கள் சுய தொழில் செய்பவர்கள். லட்சக்கணக்கில் சம்பாதிக்கவில்லை.
எங்களைப் போன்ற சிறிய வியாபாரிகளுக்கு அதிகாரிகளிடம் இருந்து எந்த பாதுகாப்பும் இல்லை. இது போன்ற திருட்டுக்கள் தொடர்ந்து நடைபெற்றறால் யார் பொறுப்பு ஏற்பது? என்று விரக்தியோடு கூறினார்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!
உடைக்கப்பட்ட கடைகளில் பல் மருத்துவமனை கட்டிடம் ஒன்று உள்ளது. மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் ஷமிகா டிப்னிஷ் மற்றும் அவருடைய ஊழியர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தை தெரிவித்தனர்.

ஏனென்றால் இந்த மருத்துவமனையை குறி வைத்து நடைபெறும் இரண்டாவது தாக்குதலாகும் இது. இது நாங்கள் பயந்து போய் இருக்கிறோம் மீண்டும் மீண்டும் எப்படி இப்படி நடக்கிறது என்று. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்றார்.
காலையில் கடைவீதிக்கு வந்த குடியிருப்பு வாசிகள், "அனைத்து ஷட்டர்களின் பூட்டுகள் அப்படியே தொங்கிக் கொண்டிருந்தன. ஆனால் மறுபுறம் அவை உடைக்கப்பட்டு இருந்தன. ஒரு காகித கடை உரிமையாளரின் சிசிடிவியில் அதிகாலை 4 மணியளவில் அந்த பகுதியில் சில திருடர்களின் காட்சிகள் பதிவாகியுள்ளன" என்று தெரிவித்தனர். இந்த சங்கிலித் தொடர் திருட்டு பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.
இதையும் படிங்க: என் சாவுக்கு நீ தான் காரணம்..அங்க மட்டும் போயிடாத என கணவன் கடிதம்!!