×
 

சோகத்தில் முடிந்த சுற்றுலா.. நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் பலி.. கண்ணீர் வடிக்கும் நண்பர்கள்..!

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையின் கீழ் பகுதியில் இறங்கி ஆற்றுப்படையில் குளித்த போது நீரில் மூழ்கி 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

தமிழகம் முழுவதுமே கோடை வெயில் வாட்டி வதைக்க துவங்கி உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ள படியால் சென்னை போன்ற மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நகரங்களில் உள்ள மக்கள் குளிர் பிரதேசங்கள் நோக்கி படையெடுக்க துவங்கி உள்ளனர். மேலும் பலர் ஓகேனக்கல், குற்றாலம், அணைகள் போன்ற நீர் பகுதிகளுக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். கோடை வெப்பத்தை தணிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊட்டச்சத்து நிபுணர்களும் அடிக்கடி தண்ணீர், இளநீர் போன்றவகைகளை பருகி உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் படியும், உடலில் நீர் இழப்பு ஏற்பட்டுவிடாதபடியும் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பலர் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க டூர் செல்ல துவங்கி உள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து பொள்ளாச்சி ஆழியார் அணைக்கு சென்ற 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் 25 பேர்  கோடை வெயிலில் இருந்து தப்பிக்க டூர் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அதன் படி அவர்கள் இன்று பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார்பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அப்போது சில மாணவர்கள் ஆழியார் அணையின் கீழ் பகுதியில் இறங்கி ஆற்றுப்படையில் குளித்து மகிழ்ந்து உள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஆன்றோ ஜெரிட் (வயது 21) என்ற மாணவர் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட மற்ற நண்பர்களான தருண் மற்றும் ரேவன் ஆகியோர் அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். தண்ணீரில் குதித்து நண்பனை மேலே கொண்டு வர போராடி உள்ளனர். ஆனால் தண்ணீரில் மூழ்கிய நபர், காப்பாற்ற வந்த நபர்களையும் உள்ளே இழுத்துள்ளார்.

இதையும் படிங்க: 9ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம்.. சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு வலை..!

மேலும் தண்ணீரின் வேகமும் அதிகரித்துள்ளது. இதனால் எதிர்பாராத விதமாக மூவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதை கண்ட சக மாணவர்கள் கத்தி கூச்சல் போட்டு உள்ளனர். உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளனர். மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கியதால் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். இதனை அடுத்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தண்ணீரில் குதித்து நீரில் மூழ்கிய மாணவர்களை தேடினர். அப்போது 3 மாணவர்களும் இறந்த நிலையில் உடல்கள் மீட்கப்பட்டனர். 

இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி மற்றும் வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஆழியார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சுற்றுலா வந்த போது, எதிர்பாராத விதமாக மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆழியார் ஆற்றுப்படையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி தண்ணீரில் குளிப்பதால் இது போன்ற விபரீதங்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜிம்கள் டார்கெட்.. ஒரு ஊசிதான்.. அர்னால்ட் ஆகலாம்! ஊக்கமருந்து கடத்திய 2 பேர் கைது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share