×
 

இந்தியா மீதான பரஸ்பர வரித் திட்டம் ஏப்ரல் முதல் அமல்... அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு..!

அதிகமான வரிவிதிப்புகளை கொண்டிருக்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரித் திட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் அமல்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் 2வது முறையாக பதவி ஏற்றதில் இருந்து பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வருகிறார். அந்த வகையில் இந்தியர்களை 2 விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அதிகமான வரியை விதிப்பதை கண்டித்த அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரித் திட்டத்தை செயல்படுத்தப் போவதாகத் தெரிவித்தார். அதாவது அமெரிக்கப் பொருட்களுக்கு என்ன வரியை இந்தியா விதிக்கிறதோ அதே வரியை இந்தியாவிலிருந்து அமெரி்க்கா வரும் பொருட்களுக்கும் விதிக்கப்படும் முறையை கையாளப்போவதாகத் தெரிவித்தார்.

அதிபர் ட்ரம்ப்யின் தினசரி அறிவிப்புகளால் இந்திப் பங்குச்சந்தை ஊசலாட்டத்தில் இருக்கிறது. இந்திய பங்குச்சந்தையின் நிலையில்லாத்தன்மையை உணர்ந்த அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இதுவரை பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.8.50 லட்சம் கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். பரஸ்பர நிதித்திட்டம் அமலுக்கு வந்தால் இந்தியா பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும், குறிப்பாக ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் கடும் வரிவிதிப்பை எதிர்கொள்ளநேரிடும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: அமெரிக்க ராணுவ உதவி திடீர் நிறுத்தம், ரஷ்ய அதிபர் புதினுக்கு உதவி செய்வதாகும் - உக்ரைன் கருத்து..!

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி.க்களின் கூட்டுக்கூட்டத்தில் நேற்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்று பேசியதாவது:

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிகமான வரியை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் விதிப்பது நியாயமற்றது. பல தசமஆண்டுகளாக ஆசிய நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக அதிகமான வரிவிதிப்பை கையாண்டன. இனிமேல், நாங்கள் அதிகமான வரிவிதிக்கும் நாடுகளுக்கு எதிராக நாங்களும்வரிவிதிப்போம். ஐரோப்பிய யூனியன், சீனா, பிரேசில், இந்தியா, மெக்சிக்கோ, கனடா உள்ளிட்ட பல நாடுகள் அமெரிக்காவுக்கு மட்டும் அதிகமான வரிவிதிக்கின்றன,ஆனால், நாங்கள் குறைவான வரியைவிதித்தோம். இது நியாயமற்ற முறை.

அமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் வரிவிதிப்பு 100 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது. வரும் ஏப்ரல் 2ம் தேதியில் இருந்து பரஸ்பர நிதித்திட்டத்தை அமெரிக்கா அமல்படுத்தும். இந்தியா, சீனா விதிக்கும் அதே வரியை அமெரிக்காவும் விதிக்கும். பிரதமர் மோடி அமெரிக்கா வந்திருந்தபோதும் இந்த முறை குறித்து அவரிடம் தெரிவித்தேன்.

அமெரிக்காவின் பரஸ்பர வரித்திட்டத்தில் இருந்து இந்தியா ஒருபோதும் விதிவிலக்கு பெற முடியாது. இதில் என்னுடன் யாரும் வரிக்கட்டமைப்பு குறித்து வாதிடமுடியாது. நம்முடைய பொருட்களுக்கு சீனா சராசரியைவிட இருமடங்கு வரி விதிக்கிறது. தென் கொரியா சராசரி வரியைவிட 4 மடங்கு வரிவிதிக்கிறது. ஆனால் நாம் அதிகமான ராணுவ உதவி வழங்குகிறோம், பல்வேறு வகைகளிலும் தென் கொரியாவுக்கு உதவுகிறோம். ஆனால் என்ன நடக்கிறது. எதிரிக்கும் இதேநிலைதான், நண்பருக்கும் இதேநிலைதான். இது நியாயமான முறை அல்ல, இதை ஒருபோதும் ஏற்க முடியாது.

வரும் ஏப்ரல் 2ம் தேதி பரஸ்பர வரித்திட்டம் தொடங்கும். மற்ற நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு என்ன சதவீதம் வரிவிதித்துள்ளதோ அதே சதவீதம் அந்நாட்டின் பொருட்களுக்கும் அமெரிக்கா விதிக்கும். அந்த நாடுகள் நம்மை அவர்களின் சந்தையில் கூட அனுமதிக்க மாட்டார்கள். நான் சீனாவுடன் இதே முறையைச் செய்தேன், மற்றவர்களுடனும் இதைச் செய்தேன். ஜோ பிடன் நிர்வாகத்தால் இதைப் பற்றி எதுவும் செய்ய முடியவில்லை, ஏனெனில் அவர்களால் அதைப் பற்றி எதுவும் செய்ய முடியாத அளவுக்கு பணம் இருந்தது. 

இவ்வாறு அதிபர் ட்ரம்ப் பேசினார்.
 

இதையும் படிங்க: அமெரிக்காவுக்கும் சாதியை கொண்டு சென்ற குஜராத்திகள்... இங்கேயுமா?.. செனட்டர்கள் கடும் எதிர்ப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share