பெண் காவலர்கள் குறித்து அவதூறு.. சவுக்கு மீது தொடரப்பட்ட 15 வழக்கு.. கோவை போலீசாருக்கு மாற்றம்..!
பெண் காவலர்க்ள் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கு உட்பட யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகள் கோவை சைபர் கிரைம் போலீசுக்கு மாற்றப்பட்டது. இதை அடுத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸில், உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சுகன்யா. இவர், கடந்தாண்டு மே மாதம் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதில், சென்னையைச் சேர்ந்த யூடியூபரான சவுக்கு சங்கர், பெண்கள் காவலர்கள் குறித்தும், காவல்துறை உயரதிகாரிகள் குறித்தும் அவதூறாக பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
அதன் பேரில் சைபர் க்ரைம் போலீஸார், தகாத வார்த்தையில் பேசுதல், பெண்களை அவதூறாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிந்தனர். தொடர்ந்து அடுத்த சில நாட்களில் அவரை போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கிளாம்பாக்கம் புதிய பஸ் ஸ்டாண்டு, பசும்பொன் முத்துராமலிங்க தேவரை இழிவுபடுத்தும் வகையில் பேட்டி கொடுத்ததாக சென்னை மற்றும் கோவை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, திருச்சி, சேலம், முசிறி, ஊட்டி, நாகப்பட்டினம் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண் போலீசார் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்தனர். இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதவிர, சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்ட போலீசார் கஞ்சா வழக்கு பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: விசாரணை நேர்மையாக நடக்காது.. குற்றவாளிகளை காப்பாற்ற பார்க்கின்றனர்.. ஆவேசமான சவுக்கு சங்கர்..!
அது தொடர்பாக, சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதியப்பட்டு, தொடர்ந்து அந்த வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தன் மீது பதியப்பட்ட வழக்கு விசாரணைகளை ஒரே இடத்துக்கு மாற்ற வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படையில், சவுக்கு சங்கர் மீதான அவதூறு வழக்குகளை கோவைக்கு மாற்றி, நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, சவுக்கு சங்கர் மீது திருச்சி, மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், ராணிபேட்டை, திருச்சி மாநகர், பெரம்பலுார், சிவகங்கை, தாம்பரம், சேலம் மாநகர், சென்னை, நாகப்பட்டினம், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பதியப்பட்ட 15 வழக்குகள் கோவை சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது.
மாற்றப்பட்ட வழக்குகளின் பழைய எப்.ஐ.ஆர்.,களை கொண்டு கோவையில் வழக்கை விசாரிக்க முடியாது என்பதால், 15 வழக்குகளையும் மறுபதிவு செய்து புதிதாக வழக்கு பதிவு செய்து கோவை போலீசார் விசாரணை துவங்கினர். இதுகுறித்து கோவை மாநகர சைபர் க்ரைம் இன்று போலீஸார் கூறும்போது, யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸில் முதல் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு தற்போது விசாரணை நிலையில் உள்ளது.
அதன் தொடர்ச்சியாக, திருச்சி மாநகர், திருச்சி மாவட்டம், மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், ராணிப்பேட்டை, பெரம்பலூர், சிவகங்கை, தருமபுரி, சேலம், சென்னை, நாகப்பட்டினம், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 15 இடங்களிலுள்ள காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகள் இங்கு மாற்றப்பட்டு, 15 புதிய வழக்குகள் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்காக தொடர்புடைய காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும் வந்துள்ளனர்.
இதற்காக 15 போலீஸ் நிலையங்கள் உள்ள உதவி ஆய்வாளர்கள் கோவைக்கு வர வழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை கோவையில் தங்கி இருந்து பணியாற்றுவார்கள். தற்பொழுது இந்த வழக்கில் விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக தேவைப்பட்டால் சவுக்கு சங்கருக்கு சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றனர்.
இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கிற்கு இதுவே உதாரணம்.. சேகர்பாபுவை தூக்கத்தில் இருந்து எழுப்பச்சொன்ன தமிழிசை..!