பீர் பாட்டிலுடன் இளைஞர்கள் அட்ராசிட்டி.. போதை தெளிந்ததும் கையில் காப்பு.. செமயாக கவனித்த போலீஸ்..!
கோவையில் முக்கிய சாலைகள் வழியே மது அருந்திவிட்டு பீர் பாட்டிலுடன் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
போதைப்பழக்கம் தம்மை சிதைப்பதோடு நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் கேடு விளைவிக்கும். மதுப்பழக்கமும் அதுபோல தான். மதுபோதையால் சிலர் வாகனம் ஓட்டுவதால் மற்றவர்கள் விபத்தில் சிக்கும் அவலமும் ஏற்படுகின்றது. இதுபோன்ற விபத்துகள் ஏற்பட கூடாது என்பதற்காகவே, போலீசார் அடிக்கடி ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கின்றனர். ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிவது என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போலீசாரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் கோவையில் 3 இளைஞர்கள் மதுபோதையில் முக்கிய சாலைகள் வழியே அட்ராசிட்டியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி வைரலானது. இந்த வீடியோ போலீசாரின் கைகளிலும் சிக்கியது. அந்த வீடியோவில் கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் இருந்து நவ இந்தியா நோக்கிச் செல்லும் மேம்பாலத்தில் டூவிலரில் மூன்று இளைஞர்கள் இரவு நேரத்தில் அதிவேகமாகச் செல்லும் வீடியோ காட்சி பதிவாகி இருந்தது.
இதையும் படிங்க: கல்லா பெட்டியில் கை வைத்த கேசியர்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி.. 5 நாளில் ரூ.40 ஆயிரம் முறைகேடு.. அப்போ 7 வருசத்தில்.?
அந்த வீடியோவில் இருந்த 3 இளைஞர்களும் மிதமிஞ்சிய மது போதையில் இருந்தனர். கையில் பீர் பாட்டிலுடன் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், எதிர் வரும் வாகனங்களையும், வாகன ஓட்டிகளையும் அவதூறாகப் பேசியபடி தாக்க முயற்சித்தது போல் வண்டியை வளைத்து வளைத்து ஓட்டினர்.
இந்த வீடியோ வைரலான நிலையில், கோவை காட்டூர் காவல்துறையினர் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்த வண்டி எண்ணை வைத்து மூவரையும் கண்டுபிடித்தனர். மூவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் ராஜ்குமார் (28), சுசீந்குமார் (23) மற்றும் கௌதம் (28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தங்களது பாணியில் விசாரித்து அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.
அதன்பின், அவர்கள் மூவரும் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், நாங்கள் வேலை முடிந்து வீடு திரும்பு போது மதுபான கடையில் பீர் வாங்கினோம். அப்போது போக்குவரத்துக்கும் மக்களுக்கும் இடையூறாக நடந்து கொண்டதால், போலீசார் எங்களைக் கைது செய்தனர். நாங்கள் செய்தது தவறுதான். இனி யாரும் இதுபோன்று தவறு செய்துவிடாதீர்கள் என கெஞ்சினர்.
போலீசார் அவர்கள் மீது 296(b), 308(4), 351(3), 281 BNS & 128, 129 r/w 177 MV Act எனப் போக்குவரத்து விதிமீறல், பீர் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், ஆபாசமான முறையில் நடந்து கொள்ளுதல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவார்கள் மீது காவல்துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரித்து உள்ளனர். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி வாகனங்களை இயங்குமாறும் போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாய் போல் குரைத்துக் கொண்டே இளைஞர் எடுத்த விபரீத முடிவு... கோவையில் பரபரப்பு...!