டெல்லி சபாநாயகராக விஜேந்தர் குப்தா தேர்வு... 6 மொழிகளில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு.. முதல் நாளிலேயே அமளி..!
டெல்லி சட்டசபை சபாநாயகராக விஜேந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டார்
டெல்லி சட்டசபை சபாநாயகராக பாஜகவை சேர்ந்த விஜேந்தர் குப்தா இன்று தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக எம்எல்ஏக்கள் ஆறு மொழிகளில் பதவி ஏற்று கொண்டனர். சட்டசபை தொடங்கிய முதல் நாளிலேயே அமளி துமளி ஏற்பட்டது.
சட்டசபையின் முதல் நாள் சிறப்பு கூட்டமான இன்று தற்காலிக சபாநாயகர் அரவிந்தர் சிங் புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து சட்டசபை தலைவராக (சபாநாயகராக) பாஜக சார்பில் விஜேந்ததர் குப்தா பெயரை முதல்வர் ரேகா குப்தா முன்மொழிந்தார். குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விஜேந்தர் குப்தா சபாநாயகராகதேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: டெல்லி சட்டமன்றம் கூடியது.. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு...!
இதனை அடுத்து முதல்வர் ரேகா குப்தாவும் எதிர்க்கட்சித் தலைவர் அதிஷியும் ஒருங்கிணைந்து பாரம்பரிய முறைப்படி அவரை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
அதைத் தொடர்ந்து கூட்டம் தொடங்கியது. முதல் நாளிலேயே ஆளும் பாஜகவுக்கும் எதிர் கட்சியான ஆம் ஆத்மிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்.
முன்னாள் முதல்வரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான அதிஷி பேசும்போது டாக்டர் அம்பேத்கர் மற்றும் பகத்சிங் ஆகியோரின் புகைப்படங்கள் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டினார்.
அதைத்தொடர்ந்து அவருக்கு ஆதரவாக உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினார்கள். அதற்கு பதிலடியாக பாஜக உறுப்பினர்களும் எதிர் கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சி உறுப்பினர்களை சபாநாயகர் கண்டித்தார். பொறுப்பற்ற முறையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்நடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
"உங்களுடைய இடங்களுக்கு சென்று அமருங்கள். அவையை நடத்த விடுங்கள். இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்திலேயே எதிர்க்கட்சியினர் வந்துள்ளனர். அவையின் கண்ணியத்திற்கு ஊறு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது .
சட்டமன்றத்தை ஓர் அரசியல் தளம் போல் ஆக்கக்கூடாது" என்று கடுமையாக எச்சரித்த சபாநாயகர், அவையை சுமுகமான முறையில் நடத்த எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு சபை ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் அவைக்கு வெளியே பேசியபோது, "அம்பேத்கர் மற்றும் பகத்சிங் புகைப்படங்களை முதல்அமைச்சர் அலுவலகத்தில் இருந்து நீக்கி உள்ளதாக" அதிஷி குற்றம் சாட்டினார்.
ஆனால் அது போல் எந்த புகைப்படமும் நீக்கப்படவில்லை என பாஜக எம்எல்ஏ தர்வேந்தர் சிங் மார்வா கூறினார். "கெஜ்ரிவால் ஒருவர்தான் பொய் சொல்கிறார் என்று நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் அதிஷி அவரை மிஞ்சிவிட்டார்" என்று பதிலுக்கு அவர் குற்றம் சாட்டினார்.
முன்னதாக தலைநகர் என்பதால் பல்வேறு மொழிகளை பேசும் எம்எல்ஏக்கள் டெல்லியில்உள்ளனர். இதனால் உருது முதல் சமஸ்கிருத வரை 6 மொழிகளில் எம் எல் ஏக்கள் பதவி ஏற்றனர்.
இதையும் படிங்க: டெல்லி வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசர அவசரமாக ரோமில் தரை இறக்கம்..!