×
 

2 ட்ரில்லியன் டாலர் பற்றாக்குறை...  அமெரிக்கா திவாலாகிவிடும் என எச்சரிக்கும் எலான் மஸ்க்...

இரண்டு ட்ரில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறையோடு அரசாங்கத்தை டொனால்ட் ட்ரம்ப் வசம், முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஒப்படைத்து சென்றுள்ளதாக தொழிலதிபர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் 47-வது அதிபராக கடந்த மாதம் 20-ந் தேதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றதில் இருந்தே அதிரடியான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக சட்டவிரோத குடியேறிகளை கை, கால்களில் விலங்கிட்டு அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வருகிறார். இதில் கடந்த 5-ந் தேதி 104 இந்தியர்களும், இரண்டு நாட்களுக்கு முன்பு 119 இந்தியர்களும் அடங்குவர். 

இதற்கு அடுத்தபடியாக அமெரிக்க அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பரிந்துரையை அமெரிக்க அரசாங்க திறன்துறையின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க் அளித்துள்ளார். இதுமட்டுமல்லாது சர்வதேச நாடுகளுக்கான நிதியுதவியை அமெரிக்கா வாரி வழங்கி வந்தது. அதற்கும் முட்டுக்கட்டை போட்டுள்ளது ட்ரம்ப் அரசு. நேற்று இதுகுறித்து பேசிய டொனால்ட் ட்ரம்ப், பிறநாடுகளின் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அவர்கள் தேர்தலில் வாக்களிக்க அமெரிக்கர்களின் வரிப்பணத்தை ஏன் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

இதையும் படிங்க: ஜோ பிடன் ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் ஒட்டுமொத்தமாக நீக்கம்: அதிபர் ட்ரம்ப் அதிரடி

இந்நிலையில் அமெரிக்கர்களின் வரிப்பணத்தை நிதியுதவி என்ற பெயரில் முந்தைய ஜோ பைடன் அரசு மோசடி செய்துள்ளதாக எலான் மஸ்க் குற்றஞ்சாட்டி உள்ளார். வரி செலுத்தும் அமெரிக்கர்கள் என்ன பைத்தியக்காரர்களா என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இப்படி வாரி, வாரி வழங்கியதன் மூலம் அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையானது 2 ட்ரில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக எலான் மஸ்க் புள்ளி விவரங்களை பட்டியலிட்டுள்ளார். அதாவது பட்ஜெட்டில் 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பற்றாக்குறையோடு பைடன் அரசு, ட்ரம்ப் வசம் ஆட்சியை ஒப்படைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த பற்றாக்குறையை விரைந்து சரிசெய்யாவிட்டால் அமெரிக்க அரசே திவாலாகி விடும் என்றும் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்கு செலவீனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கி உள்ளார். அதன் முதல்படியாகவே, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவிகளை நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் பேசியிருப்பதன் வெளிப்பாடு ஆகும். ட்ரம்பின் அதிரடியான அறிவிப்புகளுக்கு அமெரிக்கர்களில் ஒருதரப்பினர் மிகுந்த வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், அமெரிக்காவின் இத்தகைய செயல்கள் உலக நாடுகள் மத்தியில் குறிப்பாக நிதியுதவியை எதிர்நோக்கி இருந்த நாடுகளின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

இதையும் படிங்க: இந்தியாவுக்கு ஏன் 2.10 கோடி டாலர்கள் வழங்க வேண்டும்: நிதியை ரத்து செய்து அதிபர் ட்ரம்ப் உத்தரவு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share