நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி கொலை.. திருந்தி வாழ நினைத்தவரை தீர்த்துக்கட்டிய கும்பல்.. யார் இந்த வசூல் ராஜா..?
காஞ்சிபுரம் அருகே பிரபல ரவுடி வசூல் ராஜாவை மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா என்ற வசூல்ராஜா. இவருக்கு வயது 31. இவர் மீது 4 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 24 வழக்குகள் உள்ளன. சமீபத்தில் சிறை சென்று விட்டு, ஜாமினில் வெளிவந்த வசூல் ராஜா இன்று ரேஷன் கடை அருகே நின்று கொண்டு நண்பர்களுடம் பேசி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கே வந்த 6 பேர் கொண்ட கும்பல், வசூல் ராஜா மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் நிலைதடுமாறிய வசூல் ராஜா கீழே சரிந்தார். நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில், ரௌடி வசூல் ராஜா, தலை, முகம் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த வசூல் ராஜா, பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றது. பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தால் வசூல் ராஜாவின் கூட்டாளிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விஷ்ணு காஞ்சி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வசூல்ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரவுடி வசூல் ராஜாவை கொலை செய்த கும்பலை போலீஸார் தனிப்படைகள் அமைத்து தேடிவருகின்றனர். ரவுடி வசூல்ராஜாவுக்கு விரோதிகள், எதிரிகள் அதிகம். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாம்சங் ஆலை ஊழியர்கள் முற்றுகை போராட்டம்..! திணறிய ஆலை நிர்வாகம்...!
கொலை செய்யப்பட்ட வசூல் ராஜா மீது 4 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 24 வழக்குகள் உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் தெரிவித்தனர். இவருக்கு எதிரிகள் அதிகம். அதனால் என்ன காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்று தெரியவில்லை என்றும் கூறினர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி-க்களை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தனர்.
ஆரம்பத்தில் வசூல்ராஜா சிறுசிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2009-ஆம் ஆண்டு ஜோசப் மற்றும் அவரது நண்பர் இருவரை வசூல் ராஜா கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு காஞ்சிபுரம் பொய்யாக்குளம் பகுதி சேர்ந்த, ஆட்டோ ராஜா என்பவரையும் கொலை செய்தார். இதை அடுத்து ரவுடிகள் மத்தியில் வசூல் ராஜா பிரபலமானார். பின்னர் வட்டிக்கு விடும் தொழிலில் ராஜா ஈடுபட்டார். வசூல்ராஜா திரைப்படம் வெளியானபோது, வட்டிக்கு விடும் தொழிலில் ஈடுபட்டு வந்த ராஜா, அதனைத் தொடர்ந்து தனது பெயரை வசூல்ராஜா என மாற்றிக் கொண்டுள்ளார். வசூல்ராஜா என்ற பெயருக்கு ஏற்றார் போல், கடனை வசூல் செய்து கொடுப்பதிலும் வல்லவராக இருந்து வந்துள்ளார்.
ஒருவரை கொலை செய்ய வேண்டும் என ராஜா முடிவெடுத்து விட்டால், அந்த நபரை நோட்டுமேட்டு, அவருக்கு நெருக்கமானவர்களை விலைக்கு வாங்கி விடுவாராம். அதன் பிறகு அந்த நபரை முழு போதை ஆக்கி விடுவாராம். அதன் பிறகு போதையில் இருக்கும் நபரை எளிதாக வந்து, கொலை செய்துவிட்டு செல்லும் பழக்கத்தை வைத்து வந்துள்ளார் இந்த வசூல் ராஜா. கடந்த 2020 ஆண்டு சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதால், மாவட்ட கண்காணிப்பாளர், ராஜாவை குற்றவியல் நடைமுறைச் சட்டம், 110ன் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதன்படி, காஞ்சிபுரம் உட்கோட்ட நடுவர் மற்றும் சார் ஆட்சியர் முன், ராஜா ஏற்கனவே ஆஜர்படுத்தப்பட்டார். ஒரு ஆண்டுக்கு பொது அமைதியை காப்பதற்காக, நன்னடத்தை பிணைய பத்திரம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அவர் உத்தரவிட்டார். இந்நிலையில், 2020 மே மாதம் 8ல், காஞ்சிபுரம், திருக்காலிமேடு, குப்பை மேடு பகுதியில் ராஜா கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவரிடமிருந்து, 1,750 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர். அதன் பிறகு ஜாமினில் வெளிவந்த ராஜா கடந்த 5 ஆண்டுகளாக திருந்தி வாழ முடிவெடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வழக்குகளில் சரண்டர் ஆகி வழக்குகளை முடிப்பதில் ராஜா கவனம் செலுத்தி வந்ததாக தெரிகிறது. குற்றச்செயல்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ நினைத்த நிலையில், அவர் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பழைய கொலை சம்பவத்திற்கு பழி வாங்குவதற்காக இந்த கொலை நடைபெற்றதா ? அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை நடைபெற்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்... 14 வயது சிறுமியும் 16 வயது சிறுவனும் திருமணம்.!