சிங்கப்பூரில் வேலை.. கைநிறைய சம்பளம்.. சதுரங்கவேட்டை பட பாணியில் மோசடி.. விருந்து கொடுத்தவர் சிக்கினார்..!
கோவை சின்னியம்பாளையம் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக அழைத்து மண்டபத்தில் விருந்து கொடுத்த 46 பேரிடம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை, சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தகராறு நடப்பதாக பீளமேடு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே காவல் துறையினர் அங்கு சென்று விசாரித்தனர். இதில் திண்டுக்கலை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறியதை நம்பி ரூபாய் ஒரு லட்சம் கொடுத்ததாகவும், போலி பணி ஆணை கொடுத்ததால், பணத்தை திரும்பி கேட்ட போது தராமல் மோசடி செய்ததாகவும் கூறினர்.
உடனே மோசடி செய்ததாக கூறப்படும் நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் பரமக்குடியை சேர்ந்த பாரதிராஜா என்பதும், அவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் லட்சக் கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதிராஜாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே பாரதிராஜா கூட்டாளி செந்தில் மீதும் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றன.
இது குறித்து போலீசார் கூறும் போது, கைதான பாரதிராஜா சொந்தமாக லாரி வாங்கி ஒட்டியதில் நஷ்டம் அடைந்ததால், கோவை வந்து கார் டிரைவராக வேலை பார்த்து உள்ளார். அப்பொழுது அவருக்கு கோவையை சேர்ந்த செந்தில் என்பவர் அறிமுகமானார். அவர் பாரதிராஜாவிடம் வெளிநாட்டில் வேலை தெரிந்து இளைஞர்களை குறி வைத்து ஒரே நாளில் லட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம் என்று கூறி உள்ளார்.
இதையும் படிங்க: கோவை மாணவி விவகாரம்; பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் மீது பாய்ந்தது அதிரடி ஆக்ஷன்!
அதன்படி சின்னியம்பாளையத்தில் அலுவலகம் அமைத்து ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தி உள்ளனர். பின்னர் அவர்கள் ஆன்லைனில் சிங்கப்பூரில் வேலை தேடும் 500 பேரில் தொலைபேசி எண்களை சேகரித்து தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். பின்னர் அந்த பெண் மூலம் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி உள்ளனர். அதை நம்பி 93 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
அவர்களிடம் பாரதிராஜா பாஸ்போர்ட், கல்வி சான்று உள்ளிட்ட ஆவணங்களின் நகலை வாட்ஸ் அப் மற்றும் கொரியர் மூலம் அனுப்ப கூறியுள்ளார். பின்னர் அவர்களிடம் வேலைக்கு தேர்வு ஆகி விட்டதாகவும் ஆன்லைனில் ஏப்ரல் ஒன்றாம் தேதி நேர்காணல் நடைபெறும் மே 1 ஆம் தேதி சிங்கப்பூரில் செல்ல வேண்டும் என்று கூறி உள்ளார்.
அதற்கான முதலில் ரூபாய் ஒரு லட்சத்தை பத்தாம் தேதி நேரில் வந்து செலுத்த வேண்டும். மீதி ரூபாய் 2 லட்சத்து 75 ஆயிரத்து இரண்டு வருட சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்று பாரதிராஜா கூறி உள்ளார். இதற்காக நேற்று முன்தினம் சின்னியம்பாளையம் பகுதியில் ஒரு தனியார் மண்டபத்தில் வாடகைக்கு எடுத்து உள்ளனர். அங்கு விண்ணப்பம் செய்த 93 பேரில் 46 பேர் நேரில் வந்து உள்ளனர்.
அவர்களுக்கு மண்டபத்தில் காலை, மத்திய உணவு வழங்கி உள்ளனர். இதைத் தொடர்ந்து 46 பேரும் ரூபாய் ஒரு லட்சத்தை பாரதிராஜாவிடம் கொடுத்து உள்ளனர். உடனே அந்த 46 பேருக்கும் போலி பணி ஆணை வழங்கப்பட்டதாக தெரிகிறது. அதை பார்த்து சந்தேகம் அடைந்த திண்டுக்கலை சேர்ந்த ஸ்ரீதர் தான் கொடுத்த பணத்தை திரும்பி தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனால் பாரதிராஜா கையும், களவுமாக மாட்டிக் கொண்டார். தலைமறைவான செந்திலை வலைவீசி தேடி வருகின்றோம், என்றும் காவல் துறையினர் கூறினர்.
இதையும் படிங்க: பீர் பாட்டிலுடன் இளைஞர்கள் அட்ராசிட்டி.. போதை தெளிந்ததும் கையில் காப்பு.. செமயாக கவனித்த போலீஸ்..!