5 மாத குழந்தை கொலை.. தாயே கொன்ற கொடூரம்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!
புதுக்கோட்டையில் 5 மாத குழந்தை தண்ணீர் பேரலில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தாயே குழந்தையை கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள புலியூர் கிராமத்தில் நேற்றைய தினம் ஆதிரன் என்ற ஐந்து மாத ஆண் குழந்தை தண்ணீர் பேரலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த குழந்தையின் தாய் லாவண்யா, குழந்தையை தண்ணீர் பேரலில் முக்கி கொலை செய்தது தற்போது போலீசார் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
21 வயதாகும் லாவண்யாவுக்கு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கண்ணாங்குடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 31) என்பவருடன் ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணமானது. கணவருக்கும் அவருக்கும் பத்து வயது அதிகம் உள்ள காரணத்தினாலும், குடும்ப தகராறு காரணமாகவும் கணவர் மணிகண்டனை பிரிந்து லாவண்யா அவரது பெற்றோர் வீட்டில் கடந்த மூன்று மாத காலமாக வசித்து வந்துள்ளார். லாவண்யாவின் கணவர் மணிகண்டன் நாக்பூரில் பணிபுரிந்து வந்துள்ளார்.
கணவர் மணிகண்டனுக்கும், தனக்கும் 10 வயது வித்தியாசம் இருந்ததால் திருமணம் ஆனதில் இருந்து அவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாமல் இருந்து வந்துள்ளார் லாவன்யா. திருமணமாகி பத்து தினங்கள் மட்டுமே அவருடன் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. மற்ற நாட்களில் அவர் தாயார் வீட்டில் தான் லாவண்யா இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தான் ஐந்து மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்த நிலையில், குழந்தையை காரணம் காட்டி கணவனுடன் சேர்ந்து வாழ கணவனின் வீட்டார் தொடர்ந்து கூறி வந்ததாக கூறப்படுகிறது. நாக்பூரில் இருக்கும் கணவர் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு வரும்பொழுது தன்னை அவருடன் சேர்ந்து வாழ அழைப்பார் அல்லது குழந்தையை தூக்கி சென்று விடுவார் என்றும் லாவன்யா அச்சம் அடைந்துள்ளார்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து மோதிக்கொண்ட 3 வாகனங்கள்.. கணவன், மனைவி உட்பட 3 பேர் பலி..!
தற்போதே தனது கணவருடன் சேர்ந்து வாழாததால் தனது நடத்தையில் ஊரார் சந்தேகம் அடைவதாகவும், அதனால் தனது குழந்தையையும் அவர்கள் அழைத்துச் சென்று அந்த குழந்தையை உனது தாயார் சரியில்லாதவர் என்று கூறி வளர்ப்பார்கள் என்றும் குழந்தை இருப்பதால் தானே தன்னை கணவருடன் வாழ கூறுகின்றனர் அதனால் அந்த குழந்தையைக் கொன்று விடுவோம் என்றும் லாவன்யா திட்டம் தீட்டி உள்ளார். அதன்படியே குழந்தையை தண்ணீர் பேரலில் முக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் இந்த கொலை சம்பவம் தெரியாமல் இருக்க நகைக்காக மர்ம நபர்கள் கொலை செய்ததைப் போல் அனைவருக்கும் காட்ட முடிவு செய்தார். அதற்காக குழந்தையின் கையில் உள்ள காப்பையும் அவர் கழுத்தில் அணிந்து இருந்த செயினையும் அவரே மறைத்து வைத்துவிட்டு முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றபோது குழந்தையையும் கொன்று விட்டார்கள் என்று கூறி நாடகமாடி உள்ளார். அவரே அந்த குழந்தையை தேடுவது போல் நீண்ட நேரம் நாடகமாடி பின்னர் தண்ணீர் பேரலில் குழந்தையின் சடலம் கிடக்கிறது என்று கூறி அந்த சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைவதைப் போல் நடித்துள்ளார்.
இந்நிலையில் தான் லாவண்யா வீட்டு பகுதியில் 3 நாய்கள் இருந்தும் வீட்டில் ஆட்கள் இருந்தும் எப்படி மர்ம நபர்கள் வந்திருப்பார்கள்? அதனால் லாவண்யா கூறுவதைப் போல் சம்பவம் நடக்க வாய்ப்பு இல்லை என்று எண்ணிய போலீசார் பின்னர் நேற்று முதல் குழந்தையின் தாய் லாவண்யாவிடம் விசாரணை நடத்தினர். முதலில் லாவண்யா குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்த நிலையில், லாவண்யாவின் தாய் மற்றும் அவரது சகோதரியிடமும் விசாரணையை தொடர்ந்துள்ளனர்.
பின்னர் லாவண்யாவின் தாயாரிடம் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையை அடுத்து தனது தாயிடம் விசாரிக்க வேண்டாம் நான் தான் அந்த கொலையை செய்தேன் என்று ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து லாவண்யாவை கைது செய்துள்ள கீரனூர் காவல்துறையினர், முதலில் சந்தேகம் மரணம் என்று வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தற்போது அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். குழந்தை கொலை விவகாரத்தில் லாவண்யாவிடம் வாக்குமூலத்தை பதிவு செய்து வருகின்றனர். இதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலும் அடைக்க உள்ளனர்.
மேலும் லாவண்யாவின் கணவர் மணிகண்டன் நாக்பூரில் இருந்த நிலையில் அவர் நேற்று மதியம் சொந்த ஊர் திரும்பியது குறிப்பிடத்தக்கது. கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் மனவிரக்தியில் பெற்ற தாயே கொடூரமாக ஐந்து மாத ஆண் குழந்தையை கொலை செய்துவிட்டு பின்னர் நகைக்காக நடந்த கொலை போல் காட்ட முயன்று நாடகமாடிய நிலையில் போலீசாரின் விசாரணையில் தாயே கொலை செய்தது அம்பலமாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நள்ளிரவில் பயங்கரம்.. தண்ணீர் தொட்டியில் குழந்தை சடலம்.. கொள்ளையர்கள் காரணமா?