நாங்குநேரி சின்னத்துரை தாக்கப்பட்ட விவகாரம்.. இருவரை கைது செய்த போலீஸ்..!
நாங்குநேரி சின்னத்துரை மீண்டும் தாக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி - அம்பிகாபதி தம்பதியின் மகன் சின்னதுரை (வயது 20). திருநெல்வேலி திருமால் நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் அரசு ஏற்பாட்டில் வசித்து வருகின்றனர். இவர் கடந்த 2023ம் ஆண்டு அரசு பள்ளியில் படித்து வந்த போது, வேறு சமுதாய மாணவர்களுடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனால், அவர் படித்த அதே பள்ளியைச் சேர்ந்த வேறு சமுதாய மாணவர்கள் சிலர், சின்னதுரையை அவரது வீட்டிற்குள் புகுந்து, அரிவாளால் வெட்டினர். தடுக்க முயன்ற தங்கையையும் வெட்டினர். பலத்த காயமடைந்த இருவரும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
தற்போது கல்லூரியில் படித்து வரும் அவர், மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இன்ஸ்டாகிராம் செயலி மூலம் அறிமுகமான நபர் ஒருவர், தங்களுக்கு திருமண அழைப்பிதழ் தரவேண்டும் என கூறி சின்னத்துரையை தனி இடத்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அதனை நம்பிச் சென்ற சின்னதுரையை, 5 பேர் கொண்ட கும்பல் பணம் கேட்டுத் தாக்கியதாகவும் பணம் இல்லாத நிலையில், செல்போனை பறித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த சின்னத்துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: யாரு நாங்க துரோகியா? தைரியம் இருந்தா அதிமுகவை பேசச் சொல்லுங்க பார்ப்போம்! சீறிய துரைமுருகன்
இந்நிலையில், சின்னதுரை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சங்கரநாராயணன் மற்றும் சக்திவேல் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் நிலைய சரகம், கொக்கிரகுளம் வசந்தம் நகர் விரிவாக்கம் பகுதியில் வைத்து ஏப்ரல் 16ஆம் தேதி மாலை 7 மணியளவில், சின்னத்துரை தனது இன்ஸ்டாகிராம் நண்பரை பார்க்க சென்றுள்ளார்.
அப்போது, அவரை அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் தாக்கி, அவரது செல்போனைப் பறித்து சென்றதாக சின்னத்துரை புகாரளித்தார். அதன் பேரில், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில், இன்ஸ்டாகிராம் மூலம் சின்னத்துரையிடம் நண்பராக பழகிய பரமேஸ் (20) என்பவரது தலைமையிலான நண்பர்கள் சங்கரநாராயணன்(23), சக்திவேல்(18), சண்முகசுந்தரம், வேல்முருகன் ஆகியோர், அவரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு வரவழைத்து, குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பின்னர், இதுதொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், சக்திவேல் மற்றும் சங்கரநாராயணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் சம்பவத்திற்கு பயன்படுத்திய இரண்டு செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சங்கரநாராயணன் மீது பெருமாள்புரம் காவல் நிலையத்தில், ஏற்கனவே இரண்டு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. தற்போது, தலைமறைவாக உள்ள மற்ற நபர்களையும் தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்துரை மீது நடந்த தாக்குதலில் பெரிதளவில் காயம் ஏற்படவில்லை எனவும், முன்பு நடத்த சம்பவத்திற்கும் இதற்கு எந்த சம்மந்தமும் கிடையாது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது நடந்த தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் சுரேஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓடும் காரில் பலாத்கார முயற்சி இளம்பெண் பலி, தங்கை படுகாயம்.. 30 நிமிட மரண போராட்டம்..!