கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. பேராசிரியர்கள் மீது புகார்.. இல்லை என மறுக்கும் கல்லூரி நிர்வாகம்..!
நெல்லை பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு மாணவிகளுக்கு பேராசியர் இருவர் பாலியல் தொல்லை அளிப்பதாக எழுந்த புகாரை கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இறுதியாண்டு பயிலும் மாணவிகளுக்கு 2 பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் என குறிப்பிட்டு எழுதிய மனு இன்று முதலமைச்சரின் தனிப்பிரிவு, சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர், மாவட்ட கலெக்டர், அதிகாரிகள் மற்றும் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது; சித்த மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக இறுதியாண்டு படிக்கும் மாணவிகளின் செல்போன் எண்களை வாங்கி வைத்துக்கொண்டு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்கள்.
செல்போனில் டவுள் மீனிங்காக பேசுகிறார்கள். தேர்வுக்கு பயிற்சி அளிக்கிறோம் என்ற பெயரில் கல்லூரிக்கு அருகே ஒரு வீட்டில் வகுப்பு எடுப்பது போல் பாலியல் தொல்லை செய்து வருகிறார்கள். மாணவிகளை தவறாக தொடுகிறார்கள். அந்த 2 பேராசிரியர்களையும் இடமாறுதல் செய்தால் மட்டுமே மாணவிகள் நிம்மதியாக கல்வி பயில முடியும். இந்த பேராசிரியர்களிடம் இருந்து மாணவிகளை காப்பாற்றுங்கள் என கூறப்பட்டு இருந்தது. இந்த மனு சமூகவலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: ரூ.35 லட்சம் மதிப்பில் நவல்பட்டில் தூர்வாரும் பணிகள்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்..!
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும், புகாரில் உண்மை எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளதாகவும் கல்லூரி முதல்வர் டி. கோமளவல்லி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகார் குறித்து குழு விசாரணை நடத்தியுள்ளது. கல்லூரியில் இறுதியாண்டில் 2 பிரிவாக 180 மாணவிகள் படித்து வருகின்றனர்.
அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக குழுவினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, எந்த மாணவியும் எவ்வித புகாரும் தெரிவிக்கவில்லை என்று குழுவினர் தெரிவித்துள்ளனர். எனவே, மாணவிகள் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படும் புகாரில் எவ்வித உண்மையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். பல்கலைக்கழக பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளிப்பதாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மாணவிகள் பெயரில் புகார் வந்ததும், விசாரணையில் கல்லூரி நிர்வாகம் அந்த புகாரை மறுத்துள்ளதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை. வழக்கில் கைதான ஞானசேகரன்.. விடுவிக்க கோரி மனுதாக்கல்..!