என்னடா இப்படி ஏமாத்துறீங்க.. போலி ஹால்மார்க் நகைகள் விற்பனை.. 5.4 கிலோ தங்க நகைகள் பறிமுதல்..!
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் செயல்பட்டு வரும் வள்ளி விலாஸ் நகைக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 5.4 கிலோ போலி ஹால்மார்க் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ராஜாஜி சாலையில் உள்ள வள்ளி விலாஸ் தங்கமாளிகை என்ற நகைக்கடையில் ஹால்மார்க் இல்லாமலும், போலி ஹால்மார்க் முத்திரையுடனும் தரமற்ற நகைகள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. புகாரின் அடிப்படையில் இந்திய தர நிர்ணய அதிகாரிகள் நகை கடையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் பிஐஎஸ் இயக்குநர் ஜீவானந்தம், இயக்குநர் முனிநாராயணா, இயக்குநர் ஸ்ரீ. ஸ்ரீஜித் மோகன் ஜே, ஸ்ரீ. ஹரீஷ் சம்பத், துறை அதிகாரி மற்றும் ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டனர் இந்த சோதனையில் ஹால்மார்க் 6 டிஜிட் எண் இல்லாமலும், போலி ஹால்மார்க் முத்திரையிட்டும் நகைகள் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து 4.8 கோடி ரூபாய் மதிப்புள்ள 5.4 கிலோ தங்க நகைகள் கடையில் இதேபோன்று இருப்பதை அறிந்த அதிகாரிகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். நகைக்கடை உரிமையாளருக்கு போலி ஹால்மார்க் நகை விற்பனை செய்தது தொடர்பாக சம்மன் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என தெரிவித்த அதிகாரிகள் குற்றம் உறுதியானால் நகைக்கடை உரிமையாளருக்கு ஒரு வருட தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் அல்லது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் 5 மடங்கு மதிப்பு அபராதமாக விதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'காங்கிரஸுடன் திமுக ஒட்டுண்ணி கூட்டணி: நீங்கள் செய்யாத துரோகமா..? விதவைகள் வாக்குறுதி என்னாச்சு கனிமொழி..?
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள கடையின் உரிமையாளர் சரவணன், நாங்கள் தரமான தங்கத்தை தான் விற்று வருகிறோம். அதிகாரிகள் எங்களது கடையில் விற்காமல் இருந்த பழைய ஹால்மார்க் முத்திரையிட்ட தங்கத்தை கைப்பற்றியது உண்மை தான்.
அவை போலி நகைகள் அல்ல, அசல் தங்க நகைகள். கைப்பற்றப்பட்ட நகைகளை விற்க கூடாது என்பதற்காக ஒரு பெட்டியில் போட்டு சீல் வைத்து அதனையும் எங்களிடமே கொடுத்து விட்டு சென்றனர். அறிவியல் பூர்வ சோதனையின் போது தங்கத்தின் தரத்தை நிரூபிப்போம் என்று சரவணன் கூறினார்.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தங்க நகைகள் வாங்குபவர்கள் , நீங்கள் வாங்கும் அனைத்து வகையான நகைகளிலும் ஹெச் யூ ஐ டி (HUID) என்ற ஹால்மார்க் எண் உள்ளதா ? என்பது குறித்து ஆய்வு செய்து பி ஐ எஸ் (BIS Care) செயலியில் சோதித்துப் பார்த்து வாங்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஒருவேளை போலி ஹால்மாக்கில் தரமற்ற நகைகள் விற்கப்பட்டால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் இந்திய தர நிர்ணய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
HUID இல்லாமல் ஹால்மார்க் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து பொதுமக்கள் கண்டறிந்தால், பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகம், சிஐடி வளாகம், 4வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை-600113 என்ற முகவரிக்கு தெரிவிக்க வேண்டும். BIS Care மொபைல் செயலியைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது hcnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமோ புகார் அளிக்கலாம். மக்கள் அளிக்கும் ஆதாரம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும் இந்திய தர நிர்ணய ஆணையத்தின் சென்னை கிளை அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதலால் விபரீதம்..! மனைவி போட்ட பக்கா பிளான்.. கோழிக்கடையில் கணவன் சடலம்..!