சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்.. போக்சோ போதகரின் உறவினரும் கைது..!
கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது உறவினரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் மத போதகர் ஜான் ஜெபராஜ் (வயது 35). கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வரும் ஜான் ஜெபராஜ் மத போதகராகவும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வந்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஜான் ஜெபராஜ் மீது அந்த சிறுமிகள் காந்திபுரம் மத்திய மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதை அறிந்த ஜான்ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க போலீசார் தரப்பில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த மதபோதகர் ஜான் ஜெபராஜை கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ஏழைப் பெண்கள் தான் டார்கெட்.. கால் சென்டர் நடத்துவதாக மோசடி.. ஆபாச படம் எடுத்து விற்றவர்கள் கைது..!
கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் வைத்து ஜான் ஜெபராஜை கடந்த 12ஆம் தேதி கோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, கோவை அழைத்து வரப்பட்ட அவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சூழலில், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஜான் ஜெபராஜ் உறவினரான துடியலூர் பகுதியைச் சேர்ந்த பெனட் ஹரிஸ் (வயது 32) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று இரவு போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜான் ஜெபராஜ் உறவினர் பெனட் ஹாரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ஜான் ஜெபராஜுடன் சேர்ந்து இவரும், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த பெனட் ஹரிஸ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தனர். 16 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மதபோதகர் கைது செய்யப்பட்டது மட்டுமல்லாமல் அவரது உறவினரும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஓடும் பஸ்ஸில் பாலியல் தொல்லை.. சில்மிஷம் செய்த கண்டக்டர்.. ஐ.டி பெண்ணின் அதிர்ச்சி வைத்தியம்..!