இந்தியா அழைத்துவரப்பட்டார் தஹவூர் ராணா.. 18 நாள் என்ஐஏ காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி..!
அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார் மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தஹவூர் ராணா.
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி தஹவூர் ராணா நீண்ட இழுபறிக்குப் பின் அமெரி்க்காவில் இருந்து டெல்லி நேற்று இரவு அழைத்து வரப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபின், என்ஐஏ காவலில் 18 நாட்கள் விசாரிக்க அனுமதியளிக்கப்பட்டது.
அமெரிக்காவில் இருந்து நேற்று நள்ளிரவு டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் ராணாவுடன் இந்திய அதிகாரிகள் வந்து சேர்ந்தனர். மிகுந்த பாதுகாப்புடன் தஹவூர் ராணா அழைத்து வரப்பட்டு பாட்டியாலாவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் இரவு ஆஜர்படுத்தினர்.
இதையும் படிங்க: மும்பை தாக்குதல்: தஹவூர் ராணா நாளை டெல்லி அழைத்து வரப்படுகிறார்: பாட்டியாலா நீதிமன்றத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு..!
பாட்டியாலா நீதிமன்றத்தில் ராணாவை ஆஜர்படுத்த இருந்ததால் அங்கு உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ராணாவை காவலில் எடுக்க என்ஐஏ அதிகாரிகள் மனு செய்திருந்தனர். அதனை ஆய்வு செய்த நீதிபதி சந்தர் ஜித் சிங், ராணாவை 18 நாட்கள் என்ஐஏ காவலில் விசாரிக்க அனுமதியளித்தார். என்ஐஏ தலைமை அலுவலகத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு சிறையில் மிகுந்த பாதுகாப்புடன் ராணா அடைக்கப்பட்டுள்ளார்.
என்ஐஏ விடுத்த அறிக்கையில் “ராணா 18 நாட்கள் என்ஐஏ பாதுகாப்பில் இருப்பார், அவரிடம் 2008 தீவிரவாத தாக்குதல் குறித்தும், சதித்திட்டம் குறித்தும், பின்னணியில் இருக்கும் நபர்கள் குறித்து விசாரிக்க இருக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.
என்ஐஏ அதிகாரிகள் ராணாவை 20 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதியிடம் மனு அளி்த்தனர். ஆனால், 18 நாட்கள் விசாரணைக்குதான் நீதிபதி அனுமதியளித்தார்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் முதல் குற்றவாளி டேவிட் கோல்மென் ஹெட்லி தாக்குதல் நடக்கும் முன் ராணாவுடன் இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்தியாவில் உள்ள சொத்துக்கள் குறித்து ராணாவுக்கு கோல்மென் மின்அஞ்சல் செய்துள்ளார், மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த இலியாஸ் காஷ்மீர், அப்துர் ரஹ்மானையும் இந்தத் தாக்குதலில் துணையாக சேர்த்துள்ளார் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன், சிறப்பு வழக்கறிஞர் நரேந்திர மான் ஆகியோர் ஆஜராகினர். தஹவூர் ராணா சார்பில் வழக்கறிஞர்கள் யாருமில்லை என்பதால், டெல்லி சட்டசேவை ஆணையம் சார்பில் பியூஷ் சச்தேவாவை ராணா சார்பி்ல் வழக்கறிஞராக நியமித்தனர்.
64 வயதான தஹவூர் ராணா பாகிஸ்தானில் பிறந்து, கனடா நாட்டின் குடியுரிமை பெற்றவர். 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணா மூளையாக இருந்து செயல்பட்டு பல்வேறு உதவிகளை செய்தவர். இந்தத் தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதலுக்கு மூளையாக இருந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற தாவுத் கிலானி என்ற டேவிட் கோல்மெனுக்கு உதவியாக தஹவூர் ராணா இருந்தார். ராணாவை இந்தியா அழைத்துவர பல்வேறு முயற்சிகள் இந்திய அரசு எடுத்தது. ஆனால் இதை எதி்ர்த்து ராணா தாக்கல் செய்த மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ராணாவை இந்திய அதிகாரிகளிடம் விசாரணைக்கு ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தஹவூர் ராணா புதுடெல்லி அழைத்து வரப்பட்டார்.
இதையும் படிங்க: மும்பை தாக்குதல்: தஹவூர் ராணா நாளை டெல்லி அழைத்து வரப்படுகிறார்: பாட்டியாலா நீதிமன்றத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு..!