லாக்அப் டெத் வழக்கு.. டி.எஸ்.பி. உட்பட 9 பேருக்கு ஆயுள்.. 25 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி..!
தாளமுத்துநகர் காவல்நிலையத்தில் விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கில் டிஎஸ்பி, உதவி ஆய்வாளர் உட்பட ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மேல அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட். உப்பளத் தொழிலாளியான இவர் கடந்த 17-9-1999-ம் ஆண்டு வெடிகுண்டு தொடர்பான வழக்கின் விசாரணைக்காக தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். போலீஸார் அவரை லாக்கப்பில் வைத்திருந்தனர். அப்போதைய எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், அவரிடம் விசாரித்தனர். காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த வின்சென்ட், மறுநாள் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
போலீஸார் தாக்கியதில் 18-9-1999-ல் வின்சென்ட் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உயிரிழந்த வின்சென்டின் மனைவி கிருஷ்ணம்மாள், தனது கணவரை போலீஸார் அடித்துக் கொலை செய்துவிட்டதாக தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று, காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், காவலர்கள் ஜெயசேகரன், ஜோசப் ராஜ், பிச்சையா, செல்லதுரை, வீரபாகு, சிவசுப்பிரமணியன், சுப்பையா, ரத்தினசாமி, பாலசுப்பிரமணியன், காவல் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க: கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவி.. கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.. கர்நாடகாவில் பரபரப்பு..!
இந்த வழக்கு, 25 ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆண்டு ஜூன் மாதம், துாத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஓராண்டாக நடந்து வந்த இந்த வழக்கில், 13 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. வழக்கில், 38 ஆவணங்கள் குறையீடு செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி தாண்டவன் தீர்ப்பளித்தார்.
அதன்படி, வழக்கில் 11 ஆவது குற்றவாளியான தற்போதைய ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி-யாக உள்ள ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளராக உள்ள சோமசுந்தரம், ஓய்வுபெற்ற காவலர்களான செல்லதுரை, சுப்பையா, பாலசுப்பிரமணியம் உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
அப்போதைய எஸ்.ஐ., ராமகிருஷ்ணன், தற்போது ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.,யாக உள்ளார். சோமசுந்தரம், நில அபகரிப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், பிச்சையா அதே பிரிவில் எஸ்.எஸ்.ஐ.யாகவும் உள்ளனர். ஜெயசேகரன், ஜோசப்ராஜ், செல்லதுரை, வீரபாகு, சுப்பையா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர். ஓய்வு பெற்ற காவலர் சிவசுப்பிரமணியன், ரத்தினசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
டி.எஸ்.பி. உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது தென்மாவட்டத்திலேயே இதுதான் முதன் முறை என்று கூறப்படுகிறது. வழக்கில் தண்டனை பெற்றவர்களின் குடும்பத்தினர் அனைவரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். இதில் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மனைவி, மகள்கள், பேரன்கள், பேத்திகள் என பலரும் தண்டனை அறவிப்பை கேட்டதும் கதறி அழுதனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும், துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் பரிசோதனை முடிந்த பின், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில், தற்போது போலீஸ் பணியில் உள்ள டி.எஸ்.பி., உட்பட மூவரும், 24 மணி நேரத்திற்குள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்றும், தண்டனையை எதிர்த்து இவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வக்ஃபு வாரியங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரும்பவில்லை: பாஜக தலைவர் ஜேபி நட்டா உறுதி..!