பிரியாணிக்காக கைதான இருவர்... கோவையில் நடந்த வினோத சம்பவம்!!
கோவையில் பிரியாணிக்காக சண்டைப்போட்டு இரண்டு இளைஞர் கைது செய்யபட்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹோட்டல்களில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டால் ஹோட்டல் உரிமையாளரை தாக்குவது போன்ற செய்திகள் சமீபமாக அதிகளவில் வருகின்றன. அதேபோல் ஹோட்டல்களில் கொடுக்கப்படும் உணவு தரமானதாக இல்லை என்றும் சில உணவகங்களின் உணவுகளில் பூச்சி, எலி, கரப்பான் பூச்சி, பல்லி ஆகியவை இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அப்படி ஒரு சம்பவம் தான் கோவையில் நடைபெற்றுள்ளது. கோவை என்றாலே அங்கு ஹோட்டல்களுக்கு பஞ்சம் இல்லை என்று சொல்லலாம்.
அங்கு ஹோட்டல் கடைகளில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கோவை கணபதியில் தங்கி இருந்து சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் ஓட்டல் நடத்தி வருபவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன். இவர் வழக்கம் போல் தனது கடையில் வியாபாரம் செய்துக்கொண்டு இருக்கையில் அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் பிரியாணி பார்சல் வாங்கிச் சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து நண்பர்களுடன் வந்த அந்த இளைஞர்கள் பிரியாணியில் பூச்சி இருந்ததாக கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: காஸ்ட்லி 'லெஹங்கா' அணியாத மணமகள்... வாள் சண்டை போட்ட சம்மந்திகள்... போர்க்களமான திருமண மண்டபம்..!
மேலும் பூச்சி இருந்த பிரியாணிக்கு பதிலாக தங்களுக்கு 10 பிரியாணி தர வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடையின் உரிமையாளர் ராமச்சந்திரன் அவர்கள் கேட்டவாறு 10 பிரியாணி கட்டிக்கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் மேலும் தங்களுக்கு சிக்கன், ஆம்லெட் ஆகியவையும் தரும்படி கேட்டு தகராறு செய்துள்ளனர். ராமச்சந்திரன் தர மறுத்த நிலையில் அந்த இளைஞர்கள் ராமச்சந்திரனையும், அவரது சகோதரரையும் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுக்குறித்து ராமச்சந்திரன் கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஓட்டல் உரிமையாளரை தாக்கியது ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சக்திவேல், கேரள மாநிலம் குருவாயூரை சேர்ந்த பஹீம் அகமத் ஆகியோர் என்பதும், அவர்கள் துடியலூர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் மனைவிக்காக புலியுடன் போராட்டம்... கடைசியில் கணவனுக்கு நேர்ந்த சோகம்!