×
 

காதலனையும், காதல் உணர்வையும்  கொன்ற இளம்பெண் கரீஷ்மா... தூக்கு தண்டனையை மேல்முறையீடு செய்வாரா..? 

 காதலன் ஷாரோன் தங்களுடைய அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டியதாக கரீஷ்மாவின் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும் ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.

கேரள மாநிலத்தில் தூக்குத் தண்டனை பெற்ற இளம் வயது பெண் கரீஷ்மா தான். கொலை நடந்த போது கல்லூரி மாணவியான அவருக்கு வயது 22 மட்டுமே. 

தமிழக கேரளா எல்லையில் உள்ள நெய்யாற்றின் கரை கூடுதல் மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் நேற்று அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தனது கல்லூரி காதலன் ஷாரோன் ராஜை விஷம் வைத்து கொலை செய்த வழக்கில் இந்த தண்டனை அறிவிக்கப்பட்டது. 

கேரள மாநிலத்தை பொருத்தவரை தூக்குத் தண்டனை பெற்ற இரண்டாவது பெண் இவர். மொத்தம் 40 குற்றவாளிகள் தூக்குத் தண்டனைக்காக சிறையில் காத்திருக்கிறார்கள். இதே நெய்யாற்றின்கரை நீதிமன்றம் விளிஞ்சம் அருகில் உள்ள முல்லூரில் 55 வயது பெண்ணுக்கு கொலை வழக்கில் ஏற்கனவே தூக்கு தண்டனை விதித்து இருந்தது. 

இதையும் படிங்க: குற்றவாளிக்கு தூக்கு..? பெண் டாக்டர் பலாத்கார கொலையில் அதிரடி அறிவிப்பு.. பின்னணியில் மிகப்பெரிய சதி.. பாஜக ஆவேசம்

சாந்தகுமாரி என்ற பாட்டியை கொலை செய்து வீட்டில் தங்க நகைகளை கொள்ளை அடித்த வழக்கில் ரபீக்கா பீவி என்ற பெண் தான் அவர். ரபீகா அவருடைய மகன் ஷபிக் மற்றும் நண்பர் அல் அமீன் ஆகியோருக்கும் கடந்த ஆண்டு இந்த நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று நீதிபதி தீர்ப்பை வாசிக்க தொடங்கிய போது கரீஷ்மா அழத் தொடங்கியதாகவும், மரண தண்டனை பற்றிய அறிவிப்பு வெளியிடும் போது திடீரென அவர் மௌனமாகிவிட்டதாகவும் ஊடகங்கள் செய்து வெளியிட்டு இருக்கின்றன. இந்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கரீஷ்மா தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியான கரீஷ்மாவுக்கு உச்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அவருடைய தாயார் சிந்து மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார். கொலைக்கு உடந்தையாக இருந்த அவருடைய மாமா நிர்மல குமரன் நாயருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

586 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பில் "கரீஷ்மா, காதலன் ஷாரோனை கொன்றது மட்டுமல்ல அன்பின் (காதல்) உணர்ச்சியையும் கொன்று விட்டதாக" நீதிபதி தனது தீர்ப்பில் மிகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருந்தார்.

"அவருடைய வயதுக்காக தண்டனையை கருத்தில் கொள்ள முடியாது" என்றும், "குற்றத்துக்கு முந்தைய அவருடைய நடத்தையை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது" என்றும், மேலும் தீர்ப்பில்குறிப்பிட்டு இருந்தார், நீதிபதி.

 

"இந்தக் கொலை மிருகத்தனமானது" என்று வர்ணித்த நீதிமன்றம், அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் முதன்மை குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி அறிவித்திருந்தார். அதே நேரத்தில் அவருடைய காதலால் ஷாரோன் ராஜ் காதலியின் அன்புக்கு அடிமை என்றும் மரணப்படுக்கையில் இருந்த நேரத்திலும் கரீஷ்மாவை தொடர்ந்து அவர் நேசித்து வந்ததாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

"11 நாட்கள் தண்ணீர் கூட அருந்த முடியாமல் மரணப்படுக்கையில் கிடந்த ஷுரோன் மீது கரீஷ்மா காட்டிய நம்பிக்கை துரோகம் மன்னிக்க முடியாதது. கொலைக்கு முன்பாக பாலியல் உறவுக்கு உறுதியளித்து காதலனை கரீஷ்மா அழைத்து இருப்பதும் கவனிக்கத்தக்கது.. எந்தவித ஆவேசமோ ஆத்திரமோ இல்லாமல் திட்டமிட்டு இந்த கொலை நடந்து இருப்பதாகவும்" நீதிபதி குறிப்பிட்டு இருக்கிறார்.

கருஷ்மாவுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருப்பினும் ஷாரோன் காதலியை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார். பின்னர் அவர்கள் இருவரும் வீட்டில் ரகசியமாக மோதிரம் மாற்றி வெட்டுக்காடு தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு காதலனுடன் உறவை முறித்துக் கொள்ள கரீஷ்மா விரும்பினாலும் காதலன் அதற்கு சம்மதிக்கவில்லை. பிறகு தான் கரீஷ்மா திட்டமிட்டு கொலை செய்யும் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். 

சனிக்கிழமை அன்று கரீஷ்மாவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது இளம் வயதை கருத்தில் கொண்டு தனக்கு குறைந்த தண்டனை வழங்க வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாக கரீஷ்மா நீதிபதியிடம் அறிக்கை கொடுத்திருந்தார். இதற்கு முன்பு தன் மீது எந்த குற்றப் பின்னணியும் இல்லை என்றும் கூறிய அவர் தனது கல்வி சான்றிதழ்களையும் நீதிபதியிடம் சமர்ப்பித்தார். 

ஆனால், போலீஸ் தரப்பில் "அரிதிலும் அரிதான இந்த கொலை வழக்கு குற்றவாளிக்கு உச்ச பட்ச தண்டனை வழங்க வேண்டும்" என்று வற்புறுத்தப்பட்டது. "தனது காதலியே இந்த கொலையை செய்திருக்கிறார். 'காதல் என்ற போர்வையில்' அவரை அழைத்து இந்த கொடூர கொலை நடந்துள்ளது. முதல் முறை கொலை முயற்சியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து துல்லியமான திட்டமிடலுடன் இரண்டாவது முறையாக கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது" என்றும், போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

 

"ஷாரோனுக்கு கனவுகள் இருந்தன; அந்த கனவுகள் கரீஷ்மாவால் சிதைக்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர் எந்த நேரத்திலும் எந்த வருத்தமும் காட்டவில்லை. எனவே அவர் எந்தவித கருணைக்கும் தகுதியற்றவர்' என்றும், அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. காதலன் ஷாரோன் தங்களுடைய அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டியதாக கரீஷ்மாவின் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும் ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.

 கரீஷ்மா வழக்கில் அரசு வழக்குரைஞராக பணியாற்றியவர் வினித் குமார். சட்டத்தில் முனைவர் (பிஹெச்டி ) பட்டம் பெற்ற வினித் குமார் குற்றவியல் வழக்குரைஞராகவும் பல்வேறு வழக்குகளில் வாதாடிய அனுபவமும் தான் அவருக்கு இந்த வெற்றியை தேடி கொடுத்திருக்கிறது. விசாரணையில் அவரது துல்லியம், குற்றவியல் சட்டத்தில் நிபுணத்துவம் மற்றும் தனித்துவமான வாதிடும் பாணி ஆகியவை அவருடைய தனிச் சிறப்புகளாகும்.

வர்க்கலா சலீம் கொலை வழக்கு ஹரிஹர வர்மா கொலை வழக்கு அட்டிங்கள் இரட்டை கொலை வழக்கு நினோ மேத்யூ அண்ட் அனு சாந்தி வழக்கு உள்ளிட்ட பல கொலை வழக்கு உள்ளிட்ட  பரபரப்பான வழக்குகளில் அவரை சிறப்பு அரசு வழக்குரைஞராக மாநில அரசு நியமித்து இருந்தது. மூன்று தொடர்ச்சியான வழக்குகளில் அவர் பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை உறுதி செய்து காவல்துறை தலைவர்கள் மற்றும் நீதிமன்றங்களின் சிறப்பு பாராட்டுகளை பெற்றார். அவருடைய மனைவி சந்தியா வினித் மற்றும் மூத்த மகன் சனீத் குமார் இருவரும் பொறியியலாளராகவும் அவர்களின் இரண்டாவது மகன்  நவநீத்குமார் வழக்குரைஞராக திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இதையும் படிங்க: கேரள நர்ஸுக்கு ஏமனில் மரண தண்டனை... இந்திய அரசில் முயற்சி பலனளிக்குமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share