திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி வெள்ள கெவி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பெரியூர் மலை கிராம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது.இந்த பெரியூர் மலை கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு சாலை வசதி என்பது பெரியகுளத்தில் இருந்து உப்புக்காடு வரைக்கும் மட்டுமே உள்ளது. அதற்கு மேல் வனப்பகுதியில் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை வசதி இல்லாத நிலையில் நடந்தே செல்ல வேண்டும்.

இந்த நிலையில் பெரியூரை சேர்ந்த லிங்கம்மாள் (வயது 60) என்ற பெண்ணிற்கு இருதய நோய் பாதிப்பு இருந்துள்ளது,. அந்தப் பெண் நான்கு நாட்களாக உடல் நலக்குறைவால் இருந்துள்ளார். இன்று உடல் நலம் மேலும் மோசமாகவே, பெரியூர் மலை கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணை டோலி கட்டி சுமந்து வந்தனர். ஒன்பது கிலோமீட்டர் தூரம் வரை தூக்கி வந்து தற்பொழுது பெரியகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இதையும் படிங்க: சாலை வசதி இல்லாததால் அவலம்.. 8 கி.மீ டோலி கட்டி தூக்கி வந்த உறவினர்கள்.. பெண்ணை காப்பாற்ற முடியாததால் சோகம்..!


பெரியூர் மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதியான சாலை வசதி இல்லாததால் இதுபோன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு டோலி கட்டி தூக்கி வரும் நிலை தொடர்வதாக அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இவ்வாறு தூக்கி வரும் போது கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் பாதி வழியில் மரணம் அடைந்துள்ளதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


மேலும் ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது சாலை வசதி அமைத்து தரப்படும் என வாக்குறுதி கொடுத்து ஜெயித்த பின்பு இதுவரைக்கும் சாலை வசதி ஏற்படுத்தி தருவதற்கு எந்த அரசும் முன் வரவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தொடர்ந்து உடல் நலக்குறைவால் டோலி கட்டி தூக்கி வரும் நிலையை மாற்ற வேண்டும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்றால் தங்களுக்கு முழுமையான சாலை வசதி வேண்டுமென்று பெரியூர் மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விவசாயத்திற்கா? பயங்கரவாதத்திற்கா?... சிறுமலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி... என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ஷாக்...!