எந்திரன் திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறியுள்ளதாக கூறி அந்த படத்திற்கு பெற்ற சம்பளத்தின் மூலம் ஷங்கர் வாங்கிய அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டது.

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக இயக்குநர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: எஸ்டிபிஐ கட்சி தலைவர் கைது எதிரொலி.. 10 மாநிலங்களில் அமலாக்கப்பிரிவு திடீர் சோதனை..!
அப்போது, ஷங்கர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், எந்திரன் படத்தின் கதை விவகாரத்தில் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறவில்லை ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ள நிலையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.
எந்திரன் திரைப்படத்தின் கதைக்காக மட்டும் 11.5 கோடி ரூபாய் ஊதியத்தை ஷங்கர் பெற்வில்லை எனவும் மற்ற பணிகளுக்காகவும் பெற்றுள்ள நிலையில் சொத்துக்களை அமலாக்கத்துறை எப்படி முடக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.

தனி நபர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக கூறி வழக்குப்பதிவு செய்ய முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், தனி நீதிபதி ஷங்கருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ள நிலையில் புகாரின் இறுதி முடிவுக்காக காத்திருக்காமல் நடவடிக்கை எடுத்தது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர் என்.சிபி விஷ்னு தனி நபர் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யலாம் எனக்கூறினார். மேலும், அமலாக்கத்துறை நடவடிக்கை மூலம் இயக்குனர் ஷங்கருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் இந்த வழக்கை அமலாக்கத்துறையிடம் அவர் எதிர்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஆனால் இந்த விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் மௌனம், பிரச்னையை அதிகப்படுத்தி வருகிறது என்றே சொல்லலாம். ஏனெனில் படம் வெளிவந்த காலந்தொட்டு ஆரூர் தமிழ்நாடன், எந்திரன் படத்தின் மூலக்கதை தன்னுடையது என்பதை பல்வேறு விதமான ஆதாரங்களைக் காட்டி கூறிவருகிறார். எழுத்தாளர் சுஜாதாவுக்கு மரியாதை தந்து, ஊதியம் தந்து தனது படங்களில் பயன்படுத்தி வந்தவர் சுஜாதா. அப்படி இருக்கும்போது மற்றொரு எழுத்தாளரான ஆரூர் தமிழ்நாடனிடம் பாராமுகமாக இருந்தது பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது. பிரபல இயக்குநர்களான பாலச்சந்தர், மணிரத்னம் ஏன் ஹாலிவுட் இயக்குநர்கள் கூட வேறொருவரின் கதையை வாங்கி படமாக எடுத்து வெற்றி பெற்றுள்ளனர். அந்தவகையில் ஆரூர் தமிழ்நாடனின் கதைக்கான ஊதியத்தை, அங்கீகாரத்தை ஷங்கர் வழங்கி இருந்தால் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை வந்து இருக்காது என்கின்றனர் கோலிவுட்வாசிகள்..
இதையும் படிங்க: அடுத்த சோதனையா..! அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களுக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ்..!