நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் எங்களிடம் உள்ளது என தேர்த்ல் வாக்குறுதி அளித்து இருந்தார் உதயநிதி ஸ்டாலின். அடுத்து அந்த நீட்டை ஒழிக்கும் ரகசியம் என எதிர்கட்சிகள் கேள்விக்கணைகளை தொடுத்தன. பதில் சொல்ல முடியாமல் தவித்த உதயநிதி நீட்டை ஒழிக்கும் ரகசியம் எதுவுமில்லை எனக் கூறி ஜகா வாங்கினார். இந்த விவகாரத்தில் இப்போது புது ரூட்டைப் பிடித்திருப்பதாக இப்போது மார்தட்டிக் கொள்கிறது திமுக.

நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் போராட்டம் தொடர்கிறது. ‘இறுதியில் வெல்வோம்’ என்ற நம்பிக்கையை ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பானது உறுதி செய்துள்ளது. தொய்வின்றி சட்டப் போராட்டம் நடத்தினால் அதில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பொன்முடி சொன்னது விலைமாது கதையின் பாதி... க்ளைமேக்ஸை சொல்லி திமுக-வை பொசுக்கிய ரர.க்கள்..!
நீட் போராட்டம் தொடர்கிறது என்கிற தலைப்பில் வெளியாகி உள்ள அந்த கட்டுரையில், ''நீட் விவகாரத்தில் தி.மு.க. நாடகம் ஆடுவதாக தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சொல்லி வருகிறார். நாடகம் ஆடுவது அவர்தானே தவிர, தி.மு.க. அரசு அல்ல. ‘நீட் தேர்வு நல்ல தேர்வுதான், அதனை அகற்ற முடியாது’ என்று முதலமைச்சராக இருந்த போது சொன்னதும் பழனிசாமிதான். இன்றைக்கு நீட் தேர்வை ஆதரிக்கிறேனா – எதிர்க்கிறேனா என்று சொல்லாமல் ‘டிமிக்கி’ கொடுத்துக் கொண்டு இருப்பவரும் பழனிசாமிதான்.

ஆனால் இப்படி ஒரு தேர்வு வரப்போகிறது என்று தெரிந்த காலம் முதல் எதிர்த்துக் கொண்டிருக்கும் இயக்கம் தி.மு.கழகம். அந்தப் போராட்டத்தை தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருக்கும் இயக்கமும் தி.மு.கழகமே.
தமிழ்நாடு அரசால் – சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை நிராகரிப்பதாக ஒன்றிய அரசில் இருந்து தகவல் வந்த உடனே அதனை சட்டமன்றத்தில் சொன்னவர் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இப்படி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதை ஒன்றரை ஆண்டுகளாக மறைத்துவிட்டார்கள். ஒன்றிய அரசின் வழக்கறிஞரே, உயர்நீதிமன்றத்தில் சொன்ன பிறகுதான் அது வெளிச்சத்துக்கு வந்தது. அதன் பிறகும் அன்றைய அ.தி.மு.க. அரசு ஏதும் செய்யவில்லை.

ஆனால் இப்போது, இப்படி ஒரு தகவல் வந்ததும் உடனடியாக சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கடந்த 9.4.2025 அன்று கூட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள் முன்மொழிந்தார்.
“மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறையில் தமிழ்நாட்டிற்கு ‘நீட்’ தேர்வு முறையிலிருந்து விலக்கு அளிப்பதற்காகத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய சட்டமுன்வடிவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுத்துள்ள நிலையில், இந்த விலக்கைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தவேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

இந்த வகையில், ‘நீட்’ தேர்வு முறையை எதிர்த்து, கடந்த ஜூலை 2023ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசால் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கினைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது, நமது சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர மறுத்துள்ளதை எதிர்த்து, தேவைப்படின், புதிய வழக்கு ஒன்றினை உச்ச நீதிமன்றத்தில் தொடுப்பது உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து மேற்கொள்வது என ஒருமனதாகத் தீர்மானிக்கப்படுகிறது”
என்பதுதான் துணை முதலமைச்சர் உதயநிதி முன்மொழிந்த தீர்மானம் ஆகும். இதனை சட்டமன்றக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஏற்றுக் கொண்டுள்ளன. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறி இருக்கிறது.
“நீட் தேர்வு மசோதாவை நிராகரித்து இருக்கலாம். ஆனால் ‘நீட்’ தேர்வு முறையை அகற்றுவதற்கான நம்முடைய போராட்டம் எந்த வகையிலும் முடிந்து விடவில்லை.
நீட் தேர்வு என்பது ஏதோ விலக்க முடியாத தேர்வு அல்ல. பயிற்சி மையங்களின் நலனுக்காக யாரோ சிலர் தங்களின் சுயநலனுக்காக ஒன்றிய அரசை தவறாக வழி நடத்தி நடத்தும் தேர்வு அது. அதையும் முறையாக நடத்தவில்லை என்பது, பல்வேறு மாநிலங்களில் சி.பி.ஐ. மூலமாக வழக்குகள் நடந்து வருவதிலிருந்தே உங்களுக்குத் தெரியும் நாட்டுக்கும் நன்றாகத் தெரியும்.” என்று முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்கள்.

நீட் தேர்வில் எத்தகைய முறைகேடுகள் நடந்து வருகிறது என்பதை நாடு அறியும். ‘தேசிய தேர்வு முகமை’ எனப்படும் என்.டி.ஏ. என்ற அமைப்பு தான் இந்தத் தேர்வை நடத்துகிறது.
“நீட் தேர்வு வினாத்தாள்கள் ஹசாரிபாக், பாட்னாவில் கசிந்திருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நீட் வினாத்தாள் கசிவால் 155 மாணவர்கள் பலனடைந்திருக்கிறார்கள் என்பது சி.பி.ஐ. விசாரணை மூலம் தெரிய வருகிறது” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடந்த ஆண்டே தீர்ப்பு அளித்தார்கள். நீட் தேர்வு மோசடியானது என்பதற்கு வேறு சாட்சியம் தேவையில்லை.

720 மதிப்பெண்ணுக்கு 720 மதிப்பெண்ணை 61 பேர் பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு வந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதற்கான விசாரணை நடத்த உத்தரவிட்டார்கள். இதன் பிறகு தேர்வு முடிவு திருத்தப்பட்டது. இறுதி முடிவுகளின்படி இந்த எண்ணிக்கை 17ஆக குறைந்துவிட்டது. உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போடாமல் போயிருந்தால் 61 பேர் 720 மதிப்பெண் வாங்கியதாக ஆகி இருக்கும்.
2024 மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் 23.33 லட்சம் மாணவ, மாணவியர் இந்தியா முழுவதும் எழுதினார்கள். தேர்வு நடந்த நாளின் போதே உத்தரப்பிரதேசம், அரியானா, பீகார், ஜார்கண்ட் ஆகிய பல மாநிலங்களில் வினாத்தாள் கசிந்தது. ஆனால் அதைப் பற்றி தேர்வு முகமை கவலைப்படவில்லை. உடனடியாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அடுத்த மோசடியை ‘கருணை மதிப்பெண்’ என்ற பெயரால் அரங்கேற்றியது தேசிய தேர்வு முகமை. 1500 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மறுதேர்வுக்கு பலபேர் வரவில்லை. எழுதியவர்கள் முடிவிலும் முன்பு போல் இல்லை. இயற்பியல் வினாத்தாளில் குழப்பம் என்று சொல்லி 44 பேருக்கு கூடுதல் மதிப்பெண் போட்டிருந்தார்கள். அதுவும் உச்சநீதிமன்ற விசாரணையில் ரத்து செய்யப்பட்டது. இதுதான் இவர்கள் நடத்தும் நீட் தேர்வு ஆகும்.
இந்த மோசடியான தேர்வு நிச்சயம் ரத்து செய்யப்படும். அதற்கான போராட்டம் தொடர்கிறது. பழனிசாமி வழக்கம் போல வேடிக்கை பார்க்கட்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுகவுக்கு தோல்வி பயம் வந்துடுச்சு.. அதிமுக - பாஜக கூட்டணியை சிலாகிக்கும் ஜி.கே. வாசன்.!!