நாடாளுமன்றத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்ததோடு தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தமிழக மக்களையும் அவமதித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சபாநாயகரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி உள்ளார் திமுகவின் எம்பி கனிமொழி

அநாகரீகமானவர்கள் எனப் பேசியதற்காக தனது வார்த்தையை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தர்மேந்திர பிரதான் அறிவித்து இருந்தார். இந்நிலையில், தர்மேந்திர பிரதான் மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி. 
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி மறுக்கப்படுவதாகவும், புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் பள்ளி கல்வி துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுப்பதாகவும் திமுக எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் குற்றம்சாட்டி பேசினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் இந்தி திணிக்கப்படுவதாக தமிழக அரசு தவறாக பரப்புரை செய்து வருகிறது. தமிழக மாணவர்களை திமுக அரசு வஞ்சிக்கிறது. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையும் திமுக அரசு பாழ்படுத்துகிறது" எனத் தெரிவித்தார். இதனால், மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. உடனே மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்தை ஏற்க மறுத்து திமுகவினர் முழக்கம் எழுப்பத் தொடங்கினர். மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டதை அடுத்து அவை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சற்று முன் நாடாளுமன்றத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்ததோடு தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தமிழக மக்களையும் அவமதித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சபாநாயகரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி உள்ளார் கனிமொழி.
அந்த உரிமை மீறல் நோட்டீஸில் ,''மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,மக்களவையில் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளின் விதி 223 இன் கீழ், மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் மீது சிறப்புரிமை மீறல் மற்றும் அவையை அவமதித்ததற்காக நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்த அறிவிப்பை நான் இதன் மூலம் சமர்ப்பிக்கிறேன்.
2. இன்றைய மக்களவை நடவடிக்கைகளின் போது, சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி வழங்காதது குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி. சுமதி எழுப்பிய கேள்வி எண் 141 தொடர்பான துணை கேள்விக்கு பதிலளித்த மாண்புமிகு அமைச்சர், தனது பதிலில் என்னைக் குறிப்பிட்ட மாண்புமிகு அமைச்சரின் தவறான அறிக்கையை நான் தெளிவுபடுத்த முயன்றபோது, அந்த நேரத்தில் மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் மிகவும் தீங்கிழைக்கும், தவறான மற்றும் அவதூறான கருத்துக்கள் மற்றும் அறிக்கைகளை வெளியிட்டார், அவை அவையை தவறாக வழிநடத்தியது மட்டுமல்லாமல், அவையின் சிறப்புரிமை மீறலாகவும், அவையை அவமதிப்பதாகவும் பின்வரும் காரணங்களால் அமைகிறது:-

பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டதற்காக தமிழ்நாடு அரசு முதலில் இந்திய அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டதாகவும், பின்னர் அது தலைகீழாக மாறியதாகவும் மாண்புமிகு அமைச்சர் கூறினார், இது உண்மையில் தவறானது, அவையை தவறாக வழிநடத்துகிறது மற்றும் அதிகாரப்பூர்வ பதிவுகளுக்கு எதிரானது.
இந்தக் கேள்வியை எழுப்பிய மாண்புமிகு உறுப்பினர் (அதாவது, நான்) மற்றும் தமிழ்நாடு கல்வி அமைச்சர் உட்பட திமுக எம்.பி.க்கள் அவரைச் சந்தித்து, ஆரம்பத்தில் பி.எம்.ஸ்ரீ திட்டத்துடன் உடன்பட்டனர், ஆனால் பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர்" என்று மாண்புமிகு அமைச்சர் கூறினார். மாண்புமிகு அமைச்சரின் இந்தக் கூற்று முற்றிலும் ஆதாரமற்றது, மேலும் அது பொய் என்று தெரிந்தும், சபையையும் மக்களையும் தவறாக வழிநடத்தவும், தமிழ்நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் உதவியது.
மாண்புமிகு அமைச்சர் எனக்கும் திமுக மற்றும் பிற ஆதரவுக் கட்சிகளைச் சேர்ந்த எனது நாடாளுமன்ற சகாக்களுக்கும் எதிராக "தவறாக வழிநடத்துதல்", "நேர்மையற்றது", "ஜனநாயக விரோதமானது" மற்றும் "நாகரிகமற்றது" போன்ற மிதமிஞ்சிய கருத்துக்களைப் பயன்படுத்தினார், மேலும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குழு மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார், இது தமிழக மக்களைப் பிரதிபலிக்கிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தர்மேந்திர பிரதான் உருவபொம்மையை எரித்த திமுகவினர்.. நிதி வழங்க வக்கு இல்லையா? துப்பு இல்லையா? என முழக்கம்..!