அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு நீதிகேட்டு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன் நடத்தினார்.
இதனால், எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் அண்ணாமலைக்கு ஆதரவாக நடிகையும் அரசியல் விமர்சகருமான கஸ்தூரி தனது எக்ஸ் தளப்பதிவில், ‘‘என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை. சமூகவிரோதிகளை அடிச்சு தூக்க வேண்டிய தலைவன் தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொள்ளுவதை பார்க்க முடியவில்லை.
அண்ணாமலையின் வழி அனைவரின் வலியானால், தமிழகம் அரசீற்றம் கொண்டால், மாற்றம் வரும். வரவேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து திமுக ஐடிவிங் அண்ணாமலையை கடுமையாக சாடியுள்ளது. திமுக சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ள ஒரு பதிவில், ‘‘அன்பின் ஆடே... அரசியல் ஆதாயத்துக்காக நீ தூண்டிய மத-சாதிய ரீதியான வன்முறைகளுக்கும், நீ பரப்பிய வெறுப்பு பேச்சுக்களுக்கும் அவதூறுகளுக்கும் பெண்கள் -பத்திரிக்கையாளர்களை நீ தரக்குறைவாக நடத்தியதற்கும்... ஆடியோ. வீடியோ என நீ செய்த அயோக்கியத்தனங்களுக்கும், நீயும், உன் கட்சியும் செய்த கொடுஞ்செயல்களுக்கும், தமிழ்நாட்டிற்கு இழைக்கும் துரோகங்களுக்கும், இப்போது மட்டுமல்ல... உன் வாழ்நாள் முழுவதும் சாட்டையால் தான் அடித்துக் கொள்ள வேண்டும். இப்படியே அடித்துக் கொள்’’எனப் பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ‘அண்ணாமலையின் சாட்டையடி சிரிப்பா உங்களுக்கு தெரியுதா..?’கலாய்ப்பவர்களுக்கு பாஜக தொண்டர்களின் கசையடி..!
இதற்கு எதிர்வினையாற்றி வரும் பாஜகவினர், ‘‘வரலாற்றிலேயே ஒரு பெண்ணிற்கு நீதி கேட்டு தன்னையே சாட்டையால் அடித்துக் கொண்ட ஒரே தலைவன். தலைவரின் செயலுக்கு உங்களால் நியாயமான எதிர் கருத்தை பதிவிட முடியாது... தெரியாது. அதனால் தான் இப்படி எல்லாம் பதிவிடுகிறீர்களா? கொத்தடிமைகளா..?’’ என காரசாரமாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காரணம் சொல்லி சொல்லி ..சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை