''எடப்பாடி பழனிச்சாமி இரண்டு மாதத்திற்கு முன்பு எங்களுக்கும், பாஜகவுக்கும் கூட்டணி இல்லை என்று கூறி இருந்தார். தற்போது திமுக மட்டும்தான் எதிரி என்று கூறுகிறார்'' என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''எத்தனை எதிரிகள் வந்தாலும் திமுக சந்திக்கத் தயாராக இருக்கிறது. அதிமுக தலைவி ஜெயலலிதா கூறியதைப் போல் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை என்று நாங்கள் சொல்லுகிற அளவில் இல்லை. நிச்சயமாக எதிரிகள் இருக்கிறார்கள். அவர்களைவிட, பல மடங்கு வெற்றி பெறக்கூடிய ஆற்றலும், தெம்பும், திராணியும் எங்கள் தலைவருக்கு இருக்கிறது.

மனிதனுக்கு நாக்கு என்று ஒன்று இருக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி இரண்டு மாதத்திற்கு முன்பு எங்களுக்கும், பாஜகவுக்கும் கூட்டணி இல்லை என்று கூறி இருந்தார். தற்போது திமுக மட்டும்தான் எதிரி என்று கூறுகிறார். நல்லது தான். நாங்கள் வெற்றி பெறுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எடப்பாடி யாரைப்பற்றி பேசினாலும், யாரோடு வந்தாலும், எத்தனை பேரை சேர்த்துக் கொண்டு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் கூட்டணி உறுதியோடு இருக்கிறது. அதில் யாருக்கும் எந்த சலசலப்பும் உண்டாக்க முடியாது.
இதையும் படிங்க: பிரேமலதாவை ஏமாற்றியதன் பின்னணியில் பாமக… எம்.பி-யாகும் நடிகை… எடப்பாடியாரின் சந்தர்ப்பவாதம்..!

தொகுதி மறுசீரமைப்பை இந்தியாவில் யாரும் எதிர்க்க மாட்டார்கள், அசுர பலத்துடன் இருக்கிறோம் என்று நினைத்த ஒன்றிய பாஜக அரசுக்கு, தென் மாநில முதலமைச்சர்கள் ஒருமித்த குரலில் இருப்பது மிகப்பெரிய அடி. ஒன்றிய பாஜக அரசுக்கு முட்டுக்கட்டை கொடுக்கின்ற சந்திரபாபு நாயுடுகூட, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பை எதிர்க்கிறேன் என்று கூறியுள்ளார். இது ஒன்றிய பாஜகவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அடி.
தேய்ந்திருக்கிறோமா? வளர்பிறையா? என்பது இன்னும் ஓராண்டில் 2026-ல் தெரியும். இந்த ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு இல்லை என்பதை உணர்த்துகின்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். இந்த ஆட்சிக்கு ஆதரவு அலைதான் இருக்கிறதே தவிர எதிர்ப்பலை இல்லை. எதிர்ப்பலை ஒன்று, இரண்டு இருந்தாலும் ஆளுக்கு ஒரு பக்கம் பிச்சிக்கிட்டு செல்லும் பொழுது அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் தான் நாங்கள் வெற்றி பெறுவோம்.

வட மாநிலங்களில் எந்தெந்த மாநிலங்களில் முன்மொழி கொள்கையை வைத்து நடத்துகிறார்கள். பல மொழிகளை அழித்து ஹிந்தி அங்கு உருவாக்கப்பட்டு இருப்பதை தமிழ்நாடு முதல்வர் அறிக்கை வாயிலாக தெளிவுபடுத்தி இருக்கிறார். சிறு சிறு மொழி பேசும் சிறுபான்மை இன மக்களின் பல மொழிகள் அழிக்கப்பட்டு அதன் மூலமாக உருவாக்கப்பட்டதுதான் இந்தி மொழி. இந்தி பேசுகின்ற மக்கள் இந்தியா முழுவதும் கிடையாது. யாரும் எந்த சலசலப்பும் உண்டாக்க முடியாது.
தென் மாநில முதலமைச்சராக இருக்கக்கூடிய கர்நாடகா முதலமைச்சர், தெலுங்கானா முதலமைச்சர், ஆந்திர முதலமைச்சர் அனைவருமே தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யக்கூடாது'' என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சத்தியமே வெல்லவில்லை... ஆத்திரப்பட்ட பிரேமலதா... அடுத்த நொடியோ போன் போட்ட எடப்பாடியார்..!