விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதால், கட்சி நிர்வாகிகளுடன் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்து பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முதல்வரை நேரில் சந்தித்து திமுக எங்களுக்கு அளித்துவரும் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றியைத் தெரிவித்துகொண்டோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு உறுதுணையாக இருப்போம் என்பதையும் முதல்வரிடம் தெரிவித்தோம்.
யுஜிசியின் புதிய விதிகள் மாநில உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது. இதை எதிர்த்து இந்திய அளவில் இண்டியா கூட்டணி எதிர்வினையாற்ற வேண்டும். குறிப்பாக இந்த விவகாரத்தில் முதல்வர் முன்முயற்சி மேற்கொள்ள வேண்டும். மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை முற்றாக மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழ் நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும். முதல்வர் பரிசீலிப்பதாக கூறியிருக்கிறார். முதல்வருடனான இந்த சந்திப்பு மனநிறைவாக இருந்தது.

பொறுப்புள்ள ஒரு எதிர்க்கட்சி தேர்தல் புறக்கணிப்பு என்கிற நிலைப்பாட்டை எடுப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது அவர்களின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துவிடும். தேர்தலை எதிர்கொள்வதுதான் அதிமுகவுக்கான சிறப்பு. விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு என இடைத்தேர்தல்களைப் புறக்கணிக்கின்றனர். இது மறைமுகமாக பாஜகவின் அரசியல் நிலைப்பாட்டுக்கு ஒத்துழைப்பதாகும். அதிமுகவை பின்னுக்கு தள்ளி, தாங்களே 2-வது பெரிய சக்தி என பாஜக காட்டிக் கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்கிறது. அதற்கு சாதகமாகவே அதிமுகவின் நிலைப்பாடு அமையும்.
இதையும் படிங்க: சட்டமன்றத்தில் வெறும் வாக்கிங்.. இந்த ஆளுநர் தேவையா.? உதயநிதி ஸ்டாலின் பொளேர்!
இது எந்த வகையிலும் அதிமுகவுக்கு பயன் அளிக்காது. அதிமுக மீதான மக்களின் நன்மதிப்பு கடுமையாகப் பாதிக்கப்படும். இத்தகைய முடிவை அவர்கள் ஏன் எடுத்தார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இது அதிமுகவின் சரிவுக்கான புள்ளியாக அமைந்துவிடும்." என்று திருமாவளவன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பாஜக புறக்கணிக்கிறது... அதிமுக வழியில் அண்ணாமலை அதிரடி!