அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்தினர் வீடுகளில் இப்போது அமலாக்கத்துறை சோதனை செய்ய வேண்டிய அவசியம் என்ன? திமுக எம்பி என்.ஆர்.இளங்கோ கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில், அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு தொடர்புடைய எல்.எஸ்.ஜி.எஸ்.என்.ஆர் ரைஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து வருகிறது. ஆர்.ஏ.புரத்தில் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் 2 வீடுகள், அடையாறில் டிவிஹெச் நிர்வாகி ரமேஷ் வீட்டில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.இரவிச்சந்திரன். இவர் ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்’ (டிவிஹெச்) என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். கோவையில் 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மூலம் கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் ஏராளமான அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 10 மணி நேர சோதனை... கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள்... கே.என்.நேரு கூடாரத்தில் சிக்கப்போவது யார்?
இந்த நிறுவனம் மேற்கொண்ட பண பரிவர்த்தனைகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக வருமான வரித் துறை அதிகாரிகள் ஏற்கெனவே சோதனை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், வருமான வரித் துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி தில்லைநகர் 5 ஆவது குறுக்குத் தெருவில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டுக்கு, 5 கார்களில் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலை 6.45 மணி அளவில் வந்தனர். பாதுகாப்புக்கு துணை இராணுவப் படையினருடன் உடன் வந்திருந்தனர்.
அமைச்சர் நேரு, அவரது மனைவி ஆகியோர் சென்னையிலும், அவரது மகனான பெரம்பலூர் எம்.பி அருண் நேரு டெல்லியிலும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாரதி நகரில் வசிக்கும் நேருவின் மகள் ஹேமா, அவரது கணவர் ஆனந்த் ஆகியோரை அமலாக்கத் துறையினர் அழைத்து வந்து நேரு வீட்டில் சோதனையை தொடங்கினர். தயாராக எடுத்து வந்த பிரின்டர், சூட்கேஸ் உள்ளி்ட்டவற்றையும் அதிகாரிகள் உள்ளே கொண்டு சென்று சோதனை மேற்கொண்டனர்.

தில்லைநகர் 10 ஆவது குறுக்குத் தெருவில் உள்ள அமைச்சர் நேருவின் சகோதரரான மறைந்த தொழிலதிபர் இராமஜெயம் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இராமஜெயத்தின் மனைவி இலதா மட்டும் வீட்டில் இருந்தார். சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் 3 ஆவது குறுக்குத் தெருவில் நேருவின் சகோதரர் கே.என்.இரவிச்சந்திரன் நடத்தி வரும் டிவிஹெச் கட்டுமான நிறுவன அலுவலகம், மின் உற்பத்தி நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தினர்.
ரவிச்சந்திரன் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சிஐடி காலனியில் பிரகாஷ் என்பவரது வீடு, அடையாறு காந்தி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு, ஆழ்வார்பேட்டை சி.வி.ராமன் சாலையில் நேருவின் மகன் அருண் நேரு நடத்தும் ஜிஎஸ்என்ஆர் ரைஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அவரது வீடு, அலுவலகம் என சென்னையில் 7 இடங்களில் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை ஜிவி ரெசிடென்சி மசக்காளிபாளையம் சாலை பகுதியில் அமைச்சர் நேருவின் இன்னொரு சகோதரர் மணிவண்ணன் வீடு அமைந்துள்ள டிவிஹெச் ஏகாந்தா அடுக்குமாடிக் குடியிருப்பில் 3 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை, திருச்சி, கோவையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சியில் அமைச்சர் நேரு வீட்டில் மாலை 5.30 மணி அளவில் சோதனை நிறைவடைந்தது. அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சூட்கேசில் வைத்து அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றனர். அனைத்து இடங்களிலும் சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகு, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த முழு விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறையின் இந்த சோதனை குறித்து சென்னையில் திமுக சட்டத் துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ கூறுகையில், ''அமலாக்கத்துறை அதிகாரிகள் அளித்த விவரங்களின்படி, 2013-ல் வங்கிகளில் பெறப்பட்ட கடன் தொகை சம்பந்தமாக சிபிஐ 2021-ல் ஒரு வழக்குப் பதிவு செய்து, குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 4-5 ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றம் நடந்ததாக கூறப்படும் நாளில் இருந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு அமலாக்கத்துறை தற்போது சோதனை நடத்தியுள்ளது. இந்தச்சோதனை, சிபிஐயால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒரு வங்கி பரிவர்த்தனை சம்பந்தப்பட்டதுதானே தவிர, எந்த ஒரு ஊழல் வழக்கையும் சார்ந்தது அல்ல'' எனக் கூறினார்.
இதையும் படிங்க: அமைச்சர் வீட்டில் 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ரெய்டு... சிக்கிய முக்கிய ஆவணங்கள்?