மேட்டுப்பாளையத்தில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்பவரின் வீடு மற்றும் பழக்கடையில் மத்திய அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எக்ஸ்டென்ஷன் நெருவைச் சேர்ந்தவர் ராஜிக்(35). இவர் கோவை மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.மேலும்,சிறுமுகை சாலையில் பழைய இரும்புக்கடை வைத்து கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்கிறார்.

இந்நிலையில் இவரது வீடு உள்ள எக்ஸ்டென்ஷன் வீதி மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள பழக்கடையில் இன்று காலை 10 மணி முதல் அமலாக்க துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,துப்பாக்கி ஏந்திய 6 மத்திய ரிசர்வ் போலீஸ் படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: எஸ்டிபிஐ கட்சி தலைவர் கைது எதிரொலி.. 10 மாநிலங்களில் அமலாக்கப்பிரிவு திடீர் சோதனை..!

அமலாக்கத்துறை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவரது கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு குழுமி கோஷமிட முயன்றனர். அவர்களை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
மேலும்,தற்போது அங்கு எஸ்டிபிஐ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு இருப்பதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.
இதையும் படிங்க: அமலாக்கத்துறை அதிரடி உத்தரவு.. செந்தில் பாலாஜிக்கு சிக்கல்?