×
 

பெண் டாக்டரை மிரட்டி கார் பறிப்பு - துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது

பெண் டாக்டரை மிரட்டி காரை பறித்த பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து  கைது செய்தனர். 

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் ஆவத்தி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் நடத்தி பைனான்ஸ் கம்பெனியில் ரூ.2 லட்சம் ஏல சீட்டில் சேர்ந்து பணம் கட்டினார். சீட்டு முடிவடைந்த நிலையிலும் ரூ.2 லட்சத்தை திருப்பி தராததால் ஆவத்தி, ராம்குமார் இடையே தகராறு ஏற்பட்டது.


இந்நிலையில் ராம்குமார் நாமக்கல்லில் இருந்து கூலிப்படையினருடன் வந்து ஆவத்தி வீட்டில் தகராறு செய்துள்ளார். இது தொடர்பான புகாரில் கடந்த அக்டோபர் மாதம் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி பலரை கைது செய்தனர். விசாரணையில் கூலிப்படையினரை அனுப்பி வைத்தது நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி வீரா(எ) வீரக்குமார் என தெரியவந்தது.


இதையடுத்து போலீசார் நாமக்கல் சென்று வீராவை கைது செய்தனர். அவரிடம் இருந்து கார், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட கார் நாமக்கல் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த லாரி பட்டறை நடத்தி வரும் கார்த்தி மனைவி சித்த மருத்துவர் தமிழ்ச்செல்விக்கு சொந்தமானது என தெரியவந்தது. 

இதையும் படிங்க: அஞ்சு கட்சி அமாவாசை, பத்து ரூபாய் தியாகி... அமைச்சர் செந்தில் பாலாஜியை டேமேஜ் ஆக்கிய மாஜி அமைச்சர்.!


இந்நிலையில், தமிழ்செல்வி தொட்டியம் நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து காரை மீட்டார். இதற்கிடையில், ஜாமீனில் வந்த வீரா, தமிழ்செல்வியை நேற்று முன்தினம் தொட்டியம் அருகே உள்ள முருங்கை என்ற இடத்தில் வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவரை தாக்கி காரை பறித்து சென்று விட்டார்.
இதுதொடர்பாக தமிழ்ச்செல்வி காட்டுப்புத்தூர் போலீசில் புகார் அளித்தார். உடனடியாக எஸ்பி செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் நேற்று நாமக்கல் சென்று, அந்த மாவட்ட எஸ்பி தனிப்படை போலீசாருடன் சேர்ந்து, ரவுடி வீராவை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், அவரை காட்டுப்புத்தூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். 


நேற்றிரவு அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை துறையூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி அவரது உத்தரவின்பேரில் 15 நாள் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
வீரா மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நாமக்கல் மற்றும் திருச்சி காவல் நிலையங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திவ்யா சத்யராஜுக்கு திமுக காட்டிய திவ்ய தரிசனம்... கட்சியில் இணைந்த ஒரே மாதத்திற்குள் முக்கியப் பதவி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share