×
 

உலகமே சுத்துறீங்க, மணிப்பூருக்கு போகமாட்டீங்க: பிரதமர் மோடியை விளாசிய ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் நரேந்திர மோடி வருகைக்காக மணிப்பூர் மாநில மக்கள் இன்னும் காத்திருக்கிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்

காங்கிரஸ் கட்சி தொடங்கிய பாரத் ஜோடோ நியாய யாத்திரை நடத்தப்பட்டு ஓர் ஆண்டு இன்றுடன் முடிகிறது. இதையொட்டி மணிப்பூர் கலவரம் நடந்து ஓர் ஆண்டாகியும் மோடி அங்கு சென்று மக்களைச் சந்திக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார். மத்திய அரசு மணிப்பூர் மாநிலத்தையே புறக்கணித்துவிட்டது, உலகெல்லாம் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி மணிப்பூருக்கு மட்டும் ஏன் செல்லவில்லை, அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்களை ஏன் சந்திக்கவில்லை, சொந்தக் கட்சித் தலைவர்ளைக் கூட ஏன் சந்திக்கவில்லை என்றும் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில், “ இன்றுடன் ஓர் ஆண்டு கடந்துவிட்டது. பாரத் ஜோடோ நியாய யாத்திரையை காங்கிரஸ் கட்சி மணிப்பூர் மாநிலத்திலிருந்து தொடங்கி இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைந்தது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை முதன்முதலில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை காங்கிரஸ் கட்சி தொடங்கியது, இதில் 6600 கி.மீ பயணத்து, 15 மாநிலங்கள் வழியாக பயணம் முடிந்தது. 


ஆனால், மணிப்பூரில் நடந்த கலவரத்துக்குப்பின் பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை. அவரின் வருகைக்காக மணிப்பூர் இன்னும் காத்திருக்கிறது. பிரதமர் மோடிக்கோ வெளிநாடு செல்லவும், உலகப்பயணம் செல்லவும் உடலில் சக்தி இருக்கிறது, விருப்பம் இருக்கிறது, நேரம் இருக்கிறது, ஆனால், மணிப்பூரில் கலவரத்தால்  பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும், குறைகளைக் கேட்கவும் அவருக்கு நேரமில்லை, உடலில் சக்தியில்லை.


மணிப்பூரில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க பிரதமர் மோடி தொடர்ந்து மறுத்து வருகிறார், தன்னுடைய சொந்தக் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி மணிப்பூர் முதல்வரையும் அவர் சந்திக்க மறுத்து வருகிறார். 2023, மே 3ம் தேதியிலிருந்து மணிப்பூர் மாநிலத்தின் வேதனை தொடர்கிறது, இன்னும் விவாதிக்கப்படாமல் இருக்கிறது.
கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சில நாட்களுக்கு முன், மணிப்பூர் மாநிலத்துக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி தேர்தலில் காங்கிரஸ் - பாஜக ரகசிய கூட்டணி: அம்பலப்படுத்துகிறார், கெஜ்ரிவால்

இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி நேற்று கூறுகையில் “ மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நடக்கிறது, அமைதியை அங்கு கொண்டுவர பாதுகாப்பு படையினர் தொடர்ந்து முயன்று வருகிறார்கள். தீவிரமான கண்காணிப்பு, எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, இரும்பு கம்பி வேலி அமைக்கும் பணியும் நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினருக்கும் இடையே 2023, மே 3ம் தேதி, அனைத்து பழங்குடி மாணவர்கள் அமைப்பின் ஊர்வலத்துக்குப்பின் வன்முறை வெடித்தது. உயர் நீதிமன்ற  உத்தரவையடுத்து, மெய்தி சமூகத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கப்பட்டதற்கு எதிராக இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர்.

இதையும் படிங்க: மோடி அரசில் 27% வீழ்ச்சி! டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு ஏன் சரிகிறது?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share