×
 

80 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த கார்.. பெட்ரோல், ஆயில் கலந்து விஷமான தண்ணீர்.. 2 பேர் பலி..!

ஈரோடு சத்தியமங்கலம் அருகே காரை ரிவர்ஸ் எடுக்கையில் தடுப்புச் சுவற்றை உடைத்துக்கொண்டு கிணற்றில் கார் கவிழ்ந்ததால் முதியவர் பலியானார். அவரை காப்பாற்ற குதித்தவரும் பலியான சோக சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடித்துள்ள முள்ளிக்காபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவர் தனது உறவினர் காரை நேற்று மாலை 6 மணி அளவில் எடுத்துச் செல்வதற்காக காரை இயக்கியுள்ளார். 

காரை திருப்ப பின்னோக்கி இயக்கிய போது, வீட்டின் அருகிலேயே இருந்த 80 அடி கிணற்றின் தடுப்பு சுவற்றில் கார் இடித்துள்ளது. கார் இடித்த வேகத்தில், சிறிய தடுப்புச் சுவற்றை உடைத்துக் கொண்டு கார் எதிர்பாராதவிதமாக பின்னோக்கி வேகமாக சென்று கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இதில் சிவகுமார் காருடன் இடுப்பாடுகளுக்குள் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். 

80 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் 40 அடி அளவில் தண்ணீர் இருந்துள்ளது. இதனால் காருடன் மூழ்கிய சிவகுமார் வெளியே வர முடியாமல் தண்ணீரிலேயே மூழ்கியுள்ளார். சத்தம் கேட்டு வெளியே வந்த உறவினர்கள், உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சிவகுமாரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காரில் இருந்த பெட்ரோல், ஆயில் வெளியே தண்ணீரில் கலந்ததால், 40 அடி ஆழமுள்ள தண்ணீரில் மூழ்கி அவரை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தொந்தரவு செய்த முன்னாள் காதலன்.. தனியே அழைத்து கதையை முடிக்க பார்த்த காதலி.. தோட்டத்தில் காத்திருந்த காதல் பரிசு..!

நான்கு மணி நேரத்துக்கு மேலாகியும், அவரை மீட்க முடியாததால், மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடை பெற்றது. பாதி அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்ட பிறகு, நான்கு மீனவர்கள் கிணற்றுக்குள் குதித்தனர். சிவக்குமார் மற்றும் காரை மேலே எடுத்து வருவதற்காக தண்ணீருக்குள் மூழ்கினர்.  தண்ணீரில் பெட்ரோல் மற்றும் ஆயில் கலந்து நச்சுத்தன்மையாக மாறியதால், மூச்சு திணறல் ஏற்பட்டு, மூன்று மீனவர்கள் தப்பித்து வெளியே வந்து விட்டனர். பெரிய கொடிவேரியை சேர்ந்த மூர்த்தி என்ற மீனவர் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார். 

விடிய விடிய நடந்த மீட்பு பணியில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட பிறகு, கிரேன் மூலம் கார் மற்றும் காரில் இருந்த சிவக்குமார் மற்றும் அவரை காப்பாற்றச் சென்று உயிரிழந்த மீனவர் மூர்த்தி ஆகியோர் கிணற்றிலிருந்து வெளியே எடுத்து வரப்பட்டனர். காருடன் கிணற்றுக்குள் பாய்ந்து இறந்து போன விவசாயி சிவக்குமார் மற்றும் அவரைக் காப்பாற்ற சென்ற மீனவர் மூர்த்தி ஆகியோர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மருமகனுக்கு தீ வைத்த மாமியார்..! தீயில் கருகிய உடலை பார்த்து ரசித்த குரூரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share