பாரம்பரிய மதுவுக்கு முக்கியத்துவம்; மத்திய பிரதேசத்தில் புதிய கலால் கொள்கை அதிரடி அறிமுகம்
மத்திய பிரதேச மாநிலத்தில் வருகிற ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் புதிய மதுபான (கலால்) கொள்கை அமலுக்கு வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் வருகிற ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் புதிய மதுபான (கலால்) கொள்கை அமலுக்கு வருகிறது. அதன்படி குறைந்த போதை உள்ள (ஆல்கஹால் அளவு குறைந்த சதவீதத்தில் இருக்கும்) மதுபானங்கள் விற்பனை நிலையங்கள் (பார்) புதிதாக திறக்கப்பட இருக்கின்றன. மத வழிபாட்டுத்தலங்கள் உள்ள புனித நகரங்களில் இருக்கும் மது கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. அதன்படி உஜ்ஜைன், ஓம்காரேஸ்வர், மகேஸ்வர், மண்டலேஸ்வர், ஓர்ச்சா, மைஹார், சித்ரகூட், தாதியா, பண்ணா, மண்டலா, முல்டாய், மண்ட்சூர், அமர்கண்டக், சல்கன்பூர், பர்மன் கலா, லிங்கா, பர்மன் குர்த், குண்டல் பூர் மற்றும் பண்டக்பூர் ஆகியவை புனித நகரங்களில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த நகரங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு புதிதாக உரிமங்கள் வழங்கப்பட மாட்டாது. ஏற்கனவே உள்ள உரிமைகள் வருகிற மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு செயல்பட அனுமதி வழங்கப்படாது என்று மாநில அரசின் புதிய கலால் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் போதை குறைவாக இருக்கும் பீர், ஒயின் மற்றும் 10% மேல் ஆல்கஹால் இல்லாத மதுபானங்களை விற்பதற்காக தனிப்பார்களும் திறக்க புதிய கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருமணமான பெண், மற்றொருவரை காதலிப்பது குற்றமா? உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
பாரம்பரிய மது வகைகளுக்கு அடித்தது யோகம்: பழங்குடி சுய உதவி குழுக்களால் மஹுவா பூக்களில் இருந்து காய்ச்சி வடிகட்டப்படும் பாரம்பரிய மது பானத்தை ஊக்குவிப்பது இந்த கொள்கையின் மற்றொரு சிறப்பம்சமாகும். பழங்குடி சமூகங்களின் நிதி நல்வாழ்வை மேம்படுத்த பாரம்பரிய மதுபானங்களை ஊக்குவிப்பதற்கு மாநில அரசு ஏற்கனவே உறுதி அளித்து இருந்தது. புதிய கொள்கையின் கீழ் இந்த வகை மதுபானங்கள் விமான நிலையங்கள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட மது விற்பனை நிலையங்களில் வைக்கப்படும். மேலும் அரசு விதிக்கும் மதிப்பு கூட்டப்பட்ட வரியில் (வாட்) இருந்து விலக்கு அளிக்கப்படும்.
கூடுதலாக போபால், இந்தூர் ஜபல்பூர் மற்றும் குவாலியர் ஆகிய இடங்களில் உள்ள வசதிகளை போலவே மத்திய பிரதேசம் முழுவதும் உள்ள வணிக விமான நிலையங்களில் வெளிநாட்டு மதுபான கவுண்டர்களை திறக்கவும் இந்த கொள்கை அனுமதி வழங்குகிறது. ஒவ்வொரு விமான நிலையமும் வருகை மற்றும் புறப்பாடு மையங்களில் ஒரு கவுண்டர் நிறுவிக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
இதையும் படிங்க: பாஜக ஆட்சிக்கு வந்த முதல்நாள் - அண்ணாமலை எடுத்த சபதம்...!