×
 

பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பத்திரமாக தரையிறங்கியது டிராகன்.. சாதித்த நாசா..!

உலகமே உற்றுநோக்கி காத்திருந்த சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோரின் விண்வெளி பயணம் வெற்றிகரமாக முடிவடைந்து இருவரும் பத்திரமாக பூமியை வந்தடைந்தனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது அமெரிக்க விண்வெளி வீரரான சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள, புட்ச் வில்மோருடன் கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி டார்லைன் போயிங் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்றார். 

ஆராய்ச்சி முடிந்து இருவரும் உடனே பூமிக்கு திரும்புவதாக இருந்த நிலையில், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 9 நாட்களில் திரும்ப வேண்டியவர்கள், கிட்டத்தட்ட 9 மாதங்களாக விண்வெளியிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. 

இதையும் படிங்க: பூமிக்கு வரும் சுனிதா வில்லியம்ஸ் எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்னென்ன... மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்..!

இதனையடுத்து அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. விண்வெளி வீரர்கள் ஆனி மெக்லைன், விமானி நிக்கோல் ஆயெர்ஸ், ஜப்பானிய விண்வெளி வீரர் டகுயா ஒனிஷா, ரஷ்ய விண்வெளி ஆய்வாளர் கிரில் பெஸ்கோவ் ஆகியோருடன், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் க்ரூ-10 விண்கலம் கடந்த சனிக்கிழமை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்றது. 

தொடர்ந்து அனைத்து பொறுப்புகளையும் டிராகன் ராக்கெட்டில் வந்த விண்வெளி வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, சுனிதா வில்லிம்யஸ், வில்மோர், ரஷ்ய வீரர் கிரிஸ்பெஸ்கோவ், நிக் ஹாக் ஆகியோருடன், நேற்று காலை 10.35 மணிக்கு ராக்கெட் கேப்சூல் சர்வதேச விண்வெளி நிலையத்தைவிட்டு பிரியத் தொடங்கியது. பயணம் தொடங்குவதற்கு முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்களுடன் உடன் பணிபுரிந்த மற்றும் புதிதாக இணைந்துள்ள வீரர்களுக்கு அவர்கள் விடை கொடுத்தனர். 

இதனிடையே இந்திய வம்சாவளி, அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமியை வந்தடைய அவரது சொந்த ஊரான குஜராத் மாநிலம் ஜூலாசன் கிராமத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

சுமார் 3.15 மணியளவில் அதிவேகமாக பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. அப்போது சுமார் 1600 டிகிரி செல்சியஸ் வெப்பம் ஏற்பட்ட நிலையில் அதீத வெப்பத்தை காக்கும் கவசங்கள் விண்கலத்தையும் வீரர்களையும் காப்பாற்றியது. தொடர்ந்து வளிமண்டலத்திற்குள் நுழைந்ததும் டிராகன் விண்கலத்தின் வேகம் தானாகவே குறைந்த நிலையில் நான்கு பெரிய பாரசூட்கள் விரிந்தது. தொடர்ந்து டிராகன் விண்கலம் தனது வேகத்தை குறைத்து கடலில் பாதுகாப்பாக இறங்கியது. 

மேலும் மக்களின் பிரார்த்தனை வீண் போகாத விதமாக சுனிதா வில்லியம்ஸ், சுமார் 17 மணி நேர பயணத்திற்குப் பின் மார்ச் 19ம் தேதியான இன்று, இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணிக்கு பத்திரமாக பூமியை வந்தடைந்தார். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கடல் பகுதியில் ராக்கெட் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து அங்கிருந்த மீட்பு குழுவினர் விண்கலத்தின் கேப்சூலை மீட்டு வீரர்களை பத்திரமாக அழைத்து வந்தனர்.  

டிராகன் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய நிகழ்வை நாசா உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பியது. கோடிக்கணக்கானோர் அந்த நிகழ்வை பார்த்து உற்சாகம் பொங்க அவர்களை வரவேற்றனர். மேலும் சுனிதா பூமிக்கு திரும்பியது, உலக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

விண்வெளியில் அதிக நாட்களை கழித்த நாசா வீரர்களின் பட்டியலில், 608 நாட்கள் விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: “திக்..திக்... பயணம்...” பாதி வழியில் பற்றி எரிய வாய்ப்பு... சுனிதாவின் விண்கலம் பத்திரமாக தரையிறங்குமா? 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share